அதிமுக பொதுக்குழு வழக்கில் வென்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதே நாளில் அதிமுகவின் பொதுச்செயலாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
ஆனால் அதிமுகவின் பொதுக்குழு முடிவை தேர்தல் ஆணையம் ஏற்காமல் இருந்தது. தேர்தல் ஆணையம் அங்கீகரித்தால் மட்டுமே எடப்பாடி பதவி செல்லும். தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கலாம். தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது.
இதையடுத்தே எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதிமுகவின் பொதுச்செயலாளராக தான் தேர்வு செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள வேண்டும், பொதுக்குழு முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், கர்நாடக தேர்தல் நெருங்குவதால் இதில் தீர்ப்பு வழங்க வேண்டும்.
அதில் வேட்பு மனுவை முன்மொழிந்து கையெழுத்திட வேண்டியுள்ளது. அதற்கு பொதுச்செயலாளருக்கு அதிகாரம் இருக்க வேண்டும். அந்த அதிகாரத்தை செயல்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும்.
ஆனால் இதில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்காமல் இருப்பதால் எங்களால் பணிகளை செய்ய முடியவில்லை. ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். அதனால் அவரின் வாதத்தை ஏற்க கூடாது. தேர்தல் ஆணையம் இதில் உடனே முடிவு எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும், என்று வாதம் வைத்தார்.
இதில் தேர்தல் ஆணைய வழக்கறிஞர்கள்.. ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறோம். இதில் 10 நாட்களில் முடிவு செய்வோம் என்று குறிப்பிட்டார். பெரும்பாலும் இந்த வார இறுதிக்குள் இதில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
இந்த நிலையில்தான் கர்நாடகா சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டியிட முடிவு செய்துள்ளது. தமிழர்கள் அதிகம் இருக்கும் புலிகேசி நகரில் தனித்து போட்டியிட அதிமுக முடிவு செய்துள்ளது. புலிகேசி நகர் தொகுதியில் பாஜகவை எதிர்த்து அதிமுக வேட்பாளராக அன்பரசன் போட்டியிடுவார் என அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அங்கே பாஜகவை ஆதரிக்காமல் தனியாக அதிமுக போட்டியிடுகிறது. இங்கே போட்டியிடுவது அதிமுகவிற்கு அவ்வளவு அவசியம் இல்லை. ஆனாலும் அதிமுக சார்பாக வேட்பாளர் களமிறக்கப்பட முக்கிய காரணம் உண்டு.
வேட்பாளரை களமிறக்க இரட்டை இலை சின்னத்தை கேட்க முடியும். அதனால் தான் தேர்தலுக்கு இன்றோடு வேட்புமனு தாக்கல் செய்யும் நேரம் முடிவதால், உடனடியாக தேர்தல் ஆணையம் எடப்பாடியை அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அமித் ஷா அதிமுகவுடன் கூட்டணி உள்ளது என்று சொல்லியும் கூட்டணியை எதிர்த்து எடப்பாடி வேட்பாளரை களமிறக்கி உள்ளார். டெல்லி கோபம் கொண்டாலும் பரவாயில்லை என்று எடப்பாடி வேட்பாளரை களமிறக்க காரணமே சின்னத்தை கைப்பற்றத்தான் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தினர்.
இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளராக அதே தொகுதியில் நெடுஞ்செழியன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜகவை எதிர்த்து இரு தரப்பு அதிமுக வேட்பாளர்களும் மோதுகின்றனர். என்ன நடக்கப்போகிறது?
எடப்பாடி பழனிசாமி தான் அதிமுக பொதுச்செயலாளர் என தேர்தல் ஆணையம் இன்று அங்கீகரித்து விட்டது. எப்படியோ அதிமுக & பாஜக உறவில் விரிசல் பெரிதாகிக் கொண்டே போகிறது என்பது தான் உண்மை!



