fbpx
Homeதலையங்கம்அதிகரிக்கும் கொரோனா: லாக்டவுன் மீண்டும் வருமா?

அதிகரிக்கும் கொரோனா: லாக்டவுன் மீண்டும் வருமா?

தமிழ்நாட்டில் நேற்றைய ஒரு நாள் கொரோனா பாதிப்பு 83ஆக பதிவாகி உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 480 பேர் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் லாக்டவுன் குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பல கோடி பேரை பாதித்தது. 65 லட்சத்திற்கும் மேற்பட்டோரை காவு வாங்கியது.

கொரோனாவின் பாதிப்பில் இருந்து தப்பிக்க உலகமே முடங்கியது. பல நாடுகள் மாதக்கணக்கில் லாக்டவுனை அமல்படுத்தின. வேலையிழப்பு, தொழில் முடக்கம் என மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். கடந்த ஆண்டு இறுதியில் இருந்துதான் உலகம் இயல்பு நிலைக்கு திரும்பியது.

இந்த நிலையில் இன்புளுயன்சா காய்ச்சல் பரவல் அதிகரித்தது. அதோடு கொரோனா பரவலும் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 83 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 மாதத்திற்குப் பிறகு கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கோவையில் 18 பேரும், சென்னையில் 16 பேரும் செங்கல்பட்டில் 10 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பொது இடங்களில் நடமாடும் மக்கள் பாதுகாப்பிற்காக மாஸ்க் அணிவது அவசியம் என அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் 1,134 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இது கடந்த 137 நாட்களில் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது. இதன்மூலம் வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 7,026 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 5 பேர் பலியாகினர்.

இந்தியாவில் தற்போது எக்ஸ்பிபி வகை வைரஸ் தான் பரவி வருகிறது. எக்ஸ்பிபி வைரஸ் என்பது ஓமிக்ரானின் பிறழ்வு வைரஸ்களில் இருந்து உருமாறிய வைரஸ்களாகும். இந்தியாவில் வைரஸின் மரபணு மாற்றத்துடன் எக்ஸ்பிபி 1.16 என்ற வைரஸ்கள் பரவி வருகின்றது.

இந்த வைரஸ்கள் தான் நிறைய பேரை தற்போது பாதித்து வருகின்றது. எக்ஸ்பிபி 1.16 வைரஸ் வேகமாக பரவ கூடியதாக இருக்கிறது. சாதாரணமாக தும்மல் போட்டாலே அது மிக எளிதாக மற்றவர்களுக்குள் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என கூறப்படுகிறது. இதனால் இந்தியாவில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் படிப்படியாக கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா? லாக்டவுன் அமலாகுமா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. அம்மாதிரியான நிலை உருவாகாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் தான் உள்ளது. ஆம். மீண்டும் முககவசம் அணியத் தொடங்குவோம்.

வருமுன் காப்பது தானே புத்திசாலித்தனம்?

படிக்க வேண்டும்

spot_img