கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம் சார்பாக நேற்று (நவ.24) தேசிய இளைஞர் பாராளுமன்றம்-2022 நிகழ்வு, திருச்சிற்றம்பலம் கலையரங்கத்தில் நடந்தது.
பல்கலைக்கழகத்தின் மாணவர் நலன் புல முதன்மையர் முனைவர் எஸ்.உமாமகேஸ்வரி வரவேற்றார். வேந்தர் பேராசிரியர் ச.ப.தியாகராஜன் தலைமை தாங்கி பேசும்போது, மொழி மற்றும் பன்முகத்தன்மை கொண்ட ஒரு தேசமாக இந்தியா விளங்குகிறது.
இளைஞர் பாராளுமன்ற நிகழ்வின் மூலம் மாணவிகள் ஜனநாயகத்தின் நுணுக்கங்களையும், அதன் செயல்பாடுகளையும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்றார்.
பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வை.பாரதி ஹரிசங்கர் பேசும்போது, தேசத்தின் குடிமக்களின் முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்கும்போது நாம் பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் குறித்து கவனத்துடன் இருக்க வேண்டும்.
லோக்சபா, ராஜ்ய சபா உறுப்பினர்கள் தங்களது பேச்சுத்திறனால் மொழி ஆளுமையை வெளிப்படுத்தி வாதத்திறமையினால் வெற்றி பெற்று சாதிக்கிறார்கள் என்றார்.
பதிவாளர் முனைவர் சு.கௌசல்யா பேசும்போது, இளைஞர்கள் இணைந்த பாராளுமன்ற நிகழ்வு மாணவிகளுக்கு பாராளுமன்றத்தின் செயல்பாடுகளை அறிந்து கொள்ள வாய்ப்பளிக்கிறது.
மாணவர்கள் தங்களது நேரத்தை ஒதுக்கி நாடாளுமன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து பார்க்க வேண்டும். அதன்மூலம் அவர்கள் அறிவையும் நிபுணத்துவத்தையும் பெற முடியும் என்றார்.
இக்கல்வி நிறுவனத்தில் பயிலும் பல்துறை மாணவிகள் ஒருங்கிணைந்து தேசிய இளைஞர் பாராளுமன்ற நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டினர்.
கோவை முன்னாள் எம்.பி. பி.நாகராஜன்
சிறப்பு விருந்தினர் கோவை முன்னாள் எம்.பி. பி.நாகராஜன் பேசும்போது, பாராளுமன்றத்தில் நிகழ்வுகளான இந்தித் திணிப்பு, எதிர்கட்சியினரின் விவாதம், ஆளுங்கட்சியின் கொள்கை முடிவுகளால் மக்கள் எவ்வாறு பயன்பட்டார்கள் என்று கூறுவதன் மூலம் கிடைத்த கைதட்டல் போன்றவை உண்மையான பாராளுமன்றத்தையே நேரில் கண்டது போல் வியப்பிற்குரியதாக இருந்தது.
மக்களின் வரிப்பணத்தில் பாராளுமன்றம் இயங்குகிறது. பாராளுமன்றம் எப்போதும் அமைதியாக நடைபெறாது. மாறாக இப்பாராளுமன்ற நிகழ்வுகள் அமைதியாக நடைபெற்றதற்குக் காரணம் இம்மண்ணின் பெருமை.
மக்களுக்கு சேவை செய்வதையே நம் உழைப்பின் நோக்கமாக கொள்ள வேண்டும். மாதா, பிதா, குரு, தெய்வம் இவர்களை வணங்கி செயல்பட வேண்டும். ஆசிரிய பெருமக்களை மதித்து நடந்தால் மாணவர்களின் வாழ்க்கை சிறக்கும். என்னுடைய உயர்வுக்கும் ஆசிரியர்களே காரணம்.
அனைவரும் வருங்காலத்தில் சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்களாக வளர வாழ்த்துகள் என்றார். சிறப்பு விருந்தினருக்கு வேந்தர் பேராசிரியர் ச.ப.தியாகராஜன் நினைவுப் பரிசு வழங்கினார். இந்தித் துறையின் தலைவர் பேராசிரியர் முனைவர் ஷோபனாகொக்கடன் நன்றி கூறினார்.



