2024 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க அனைத்துக் கட்சிகளும் இப்போதிலிருந்தே தயாராகி வருகின்றன. பாஜக தங்களுக்கான வியூகங்களை வகுத்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகளும் மறுபுறத்தில் தயாராகி வருகின்றன.
முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் இல்லாமல் இருப்பது அக்கட்சிக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்ததை அடுத்து, ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார். அதன் பின்னர் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராகச் செயல்பட்டு வருகிறார்
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மீண்டும் கட்சித் தலைமையை ஏற்க வேண்டுமென வெளிப்படையாகவே கூறி வருகின்றனர்.
ஆனால் தலைவர் பதவி வேண்டாம் என ராகுல் காந்தி தனது முடிவில் பிடிவாதமாக உள்ளார். ராகுலைப் போலவே பிரியங்கா காந்தியும் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்கத் தயங்குகிறார்.
ஆனால் பாஜகவுடன் ஒப்பிடும்போது காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ளது என்பதே தற்போதைய உண்மை. அதில் இருந்து மீட்டெடுத்து அதன் பலத்தை கூட்ட வேண்டுமானால் காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமிக்க வேண்டியது அவசியமான ஒன்றே.
அதேநேரத்தில் சோனியாகாந்தி குடும்பத்தை சாராத ஒருவர் கட்சியை வழிநடத்துவது மிகவும் கடினமானது என்பதும் வெளிப்படை.
இந்த பரபரப்பான அரசியல் சூழலில் காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான உட்கட்சி தேர்தல் வருகிற அக்டோபர் மாதம் 17ம் தேதி நடைபெறும் என சோனியாகாந்தி அறிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் 19ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியாகாந்தி குடும்பத்தைச் சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதென்றால், அதில், அசோக் கெலாட், கே.சி.வேணுகோபால், மீரா குமார், குமாரி செலிஜா, கமல்நாத், ப.சிதம்பரம், பூபேஷ் பாகல் ஆகியோருக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது.
இந்த நேரத்தில் வேறு ஒரு தலைவரை தேர்ந்தெடுப்பதை விட, ராகுல்காந்தியே அடுத்த தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்பது காங்கிரஸ் தொண்டர்களின் ஒரேவிருப்பமாக இருக்கிறது;
வேறு யாரைத் தலைவராக ஆக்கினாலும் ராகுல்காந்தியை முன்னிறுத்தி அரசியல் செய்தால் தான் அக்கட்சிக்கு வலுசேர்க்க முடியும் என்பது தவிர்க்க முடியாதது.
காங்கிரசுக்கும் இந்தியாவுக்குமான உணர்வுபூர்வமான நெருக்கத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி காங்கிரசை பலவீனப்படுத்தும் முயற்சியில் பாஜக பிரசாரத்தை முன்னெடுக்கிறது.
அதனை முறியடிக்கவே ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் டெல்லி வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். காங்கிரசுக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்து விட்ட ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும்; வேண்டாம் என மறுப்பது சரியல்ல.
கட்சிக்காகவே உழைக்க விரும்புவதாகக் கூறுவது உண்மையானால் வெற்றி தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் ராகுல்காந்தி தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும்.
அது தான் காங்கிரசுக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது!



