fbpx
Homeதலையங்கம்இணையத்தில் ட்ரெண்ட் ஆன பி.டி.ஆரின் வீடியோ!

இணையத்தில் ட்ரெண்ட் ஆன பி.டி.ஆரின் வீடியோ!

உத்தர பிரதேச மாநிலம், புந்தேல் கண்ட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, இலவசத் திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது என தெரிவித்திருந்தார்.

மேலும், “இலவசத் திட்டங்களை அறிவித்து மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்க முடியும் என சிலர் கருதுகின்றனர். இந்த மோசமான கலாச்சாரத்தை மக்கள் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும். இந்திய அரசியலில் இருந்து இலவசத் திட்டக் கலாச்சாரம் வேரறுக்கப்பட வேண்டும்“ எனவும் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து இலவச திட்டங்கள் குறித்த விவாதங்கள் பொதுவெளியில் எழுந்தன. மோடியின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இலவச திட்டங்களை அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளாக வழங்கலாமா என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், தனியார் ஊடகம் ஒன்றில் நடைபெற்ற விவாதம் ஒன்றில், தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார். அப்போது, இலவசங்கள் என்றால் என்ன? அவற்றை முறைப்படுத்த வேண்டுமா? அப்படியென்றால் யார் அதைச் செய்வது என நெறியாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: இந்த விவாதம் இதற்கு முன்பு 15வது நிதிக் குழு தனது நெறிமுறைகளை வெளியிட்ட போதே நடைபெற்றது.

அப்போது ஒரு திட்டத்தை நல்ல இலவச திட்டம், தீய இலவச திட்டம் என எப்படி வரையறுப்பீர்கள் என கேள்வி எழுப்பியதாக தெரிவித்தார். நிதி எப்படி கையாளப்படுகிறது என்பதை கண்காணிப்பவராக உச்ச நீதிமன்றம் எந்த அடிப்படையில் செயல்படுகிறது.

அரசியலமைப்பு சட்டத்தில் உச்ச நீதிமன்றம் மட்டுமல்ல எந்த நீதிமன்றத்துக்கும் எப்படி மக்களின் பணம் செலவிடப்படுகிறது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்ட சட்டமன்றங்களுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது.

மேலும், ‘இலவசங்கள் தீய காரியம் என்றால் அதிமுக அரசின் மோசமான இலவச திட்டமான இருசக்கர வாகனங்களுக்கு ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க ஏன் பிரதமர் டெல்லியில் இருந்து சென்னைக்கு பறந்துவந்தார்?.

இதேபோல், தமிழ்நாடு இலவசங்களை வழங்குகிற மாநிலம் என்று நீங்கள் கூறினால், இரண்டு விஷயங்களை நான் குறிப்பிட வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தனிநபர் வருவாய், மனிதவள மேம்பாடு, சமூக மேம்பாடு,உயர் கல்வியில் சேருபவர்கள் விகிதம் போன்றவற்றில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

கடன்பெறும் வரம்பை விட எங்களின் நிதி பற்றாக்குறை குறைவாகவே உள்ளது. மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையை விட தமிழகத்தின் நிதி பற்றாக்குறை குறைவானது.

இப்படி இருக்கும்போது நாங்கள் எப்படி சிறப்பாக பணியாற்றுவது என்பதை எப்படி யாரோ சொல்ல முடியும். நாங்கள் சரியாக பணியாற்றுகிறோமா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் பதிலளித்தார்

அப்போது அவரிடம் நெறியாளர் கேள்வி ஒன்றை எழுப்பினார். அதில்,இலவசங்கள் காரணமாக திறன் வளராது என்று மோடி கருதுகிறார். இலவசங்கள் தற்காலிக தீர்வை மட்டுமே தரும். மாறாக திறனை, திறமையை வளர்க்க கூடிய நலத்திட்டங்களை அரசு செய்ய வேண்டும் என்று மோடி நினைக்கிறார் என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த பழனிவேல் தியாகராஜன் “ஒரு விஷயத்தில் அடிப்படை இருக்க வேண்டும் அல்லது உங்களுக்கு சிறப்பு நிபுணத்துவம் இருக்க வேண்டும். நீங்கள் பொருளாதாரத்தில் இரட்டை பி.எச்.டி ஆக இருக்க வேண்டும் அல்லது எங்களை விட உங்களுக்கு நன்றாகத் தெரியும் என்று சொல்லும் ஒன்று உங்களிடம் இருக்க வேண்டும்.

அல்லது நீங்கள் வளர்ந்த ஒரு செயல்திறனை பதிவு செய்திருக்க வேண்டும், அல்லது பொருளாதாரத்தை வளர்த்து இருக்கவேண்டும். இதில் எதுவும் நீங்கள் செய்யவில்லை. நாங்கள் ஒன்றிய அரசின் கருவூலத்திற்கு 1 ரூபாய் செலுத்தினால் எங்களுக்கு 30, 33 பைசா கிடைக்காது. நான் இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்.

உங்களின் சாதனைகள், செயல்பாடுகள் எங்களை விட சிறப்பாக இருந்தால் எங்களுக்கு நீங்கள் அறிவுரை சொல்லலாம். நீங்கள் கடனை அடைத்துவிட்டீர்கள், பொருளாதாரத்தை சரி செய்துவிட்டீர்கள், தனி நபர் வருமானத்தை உயர்த்திவிட்டீர்கள் என்றால் உங்கள் பேச்சை நாங்கள் கேட்கலாம். அது எதுவுமே இல்லாத போது உங்களின் பேச்சை நாங்கள் ஏன் கேட்க வேண்டும்?” என்று கூறினார்.

அவரின் இந்த பேச்சு இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதிலும் வடஇந்தியர்கள் தமிழ்நாடு நிதியமைச்சரின் பேச்சை பாராட்டி வருகின்றனர். வடஇந்தியாவில் இப்படி பேச யாரும் இல்லாத நிலையில் தமிழக அமைச்சர் இந்தியா முழுமைக்கும் பேசி வருகிறார் என வடஇந்தியர்கள் பாராட்டி வருகின்றனர். பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் வாதத் திறனை தமிழகமும் வியந்து பாராட்டுகிறது!

படிக்க வேண்டும்

spot_img