fbpx
Homeதலையங்கம்ஒட்டுமொத்த ஒரே குரல் ‘நீட் தேர்வு வேண்டாம்’

ஒட்டுமொத்த ஒரே குரல் ‘நீட் தேர்வு வேண்டாம்’

தமிழகத்துக்கு நீட் தேர்வு வேண்டாம்; அது தேவையில்லை என்றே ஒட்டுமொத்த மக்களின் ஒரே குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

நீட் காரணமாக தமிழக மாணவச் செல்வங்களின் இன்னுயிர் பறிபோவது இன்னும் தொடர்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் அதற்கு நீட் தேர்வில் இருந்து முழு விலக்கு பெறுவதே ஒரே தீர்வாக இருக்கும்.

அதற்காகத்தான் தமிழக அரசு போராடி வருகிறது. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதலுக்கு ஆளுநருக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆளுநரோ அதை அப்படியே கிடப்பில் போட்டு விட்டார். அவர் தன் ஜனநாயகக் கடமையை ஆற்றத் தவறி விட்டார்.

நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் உரத்த குரலில் கோரிக்கையை பதிவு செய்தனர். குடியரசுத் தலைவரை அணுகி மனு கொடுத்தனர். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முயன்ற தமிழக எம்.பிக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

நாலைந்து முறை காத்திருந்தும் சந்திக்காமல் அமித் ஷா தவிர்த்து விட்டார். இதன் மூலம் ஜனநாயகத்துக்கே வேட்டு வைத்து விட்டார் அமித்ஷா.
இந்த சூழலில் தான் நேற்று தமிழக சட்டப்பேரவையில் நீட் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு முறையானது, 12 ஆண்டுகள் படிக்கக்கூடிய பள்ளிக்கல்வியால் எவ்வித பயனுமில்லை என்ற நிலையை உருவாக்கி பள்ளிக் கல்வி அமைப்பையே அர்த்தமற்றதாக ஆக்குகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். இந்த பிரச்சினையை எள் முனையளவு கூட பின்வாங்காமல் முன்னெடுத்துச் செல்வோம் என்றும் அவர் சபதமிட்டுள்ளார்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற, தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைளுக்கும் ஆதரவு தருவதாக அதிமுக தெரிவித்துள்ளது. பாஜகவைத் தவிர மற்ற கட்சிகள் ஆதரவுக் கரம் நீட்டி உள்ளன.

நீட் தேர்வு விலக்கு சட்டம் மீதான அடுத்தகட்ட நகர்வை தீர்மானிக்க நாளை (ஜனவரி 8) அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டி இருக்கிறார். நீட் தேர்வுக்கு முடிவு கட்டும் வகையில் இக்கூட்டத்தில் உருப்படியான விவாதங்கள் நடக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அனைத்துக்கட்சி கூட்டத்தின் முடிவுகள் அமைய வேண்டும். சட்டப் போராட்டத்தோடு ஜனநாயக வழியில் மக்கள் போராட்டமும் இணைந்து களம் காண வேண்டும்.

விடிவு காலம் பிறக்கட்டும்!

படிக்க வேண்டும்

spot_img