fbpx
Homeதலையங்கம்ஏன் இந்த தலைமறைவு?

ஏன் இந்த தலைமறைவு?

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கடந்த டிசம்பர் 17ம் தேதியில் இருந்து தலைமறைவாக இருந்து வருகிறார். டெல்லியில் பதுங்கி இருக்கிறார்; திருப்பத்தூரில் இருக்கிறார்; இப்போது கோவையில் மறைந்து இருக்கிறார் என்றெல்லாம் தினமும் ஒரு தகவல் வருகிறது.

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்திருப்பதாக அவர் மீது வழக்கு. தொடர்ந்து மோசடி புகார்கள் குவிந்தபடி உள்ளன.

வெவ்வேறு கார்களில் மாறிமாறி ஏறிச்சென்று தப்பினார், வேறு கட்சிகளின் கொடிகளை கார்களில் கட்டி தப்பியோடினார் என்றெல்லாம் தகவல் வெளியாகி இருக்கிறது.

ராஜேந்திர பாலாஜி யார்? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டு அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். அப்படிப்பட்டவர் தலைமறைவாக இருப்பதை விட கேவலம் வேறு எதுவும் இருக்க முடியாது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு இதை விட வேறு தலைகுனிவும் இருக்க முடியாது.

அமைச்சராக இருந்தபோது ‘வெட்டுவேன்’, ‘குத்துவேன்’, ‘நாக்கை அறுப்பேன்’ என்று மிரட்டுவதே ராஜேந்திர பாலாஜியின் பேச்சுப் பாணியாக இருந்தது. அந்த தைரியம் எல்லாம் இப்போது எங்கே போனது?. வழக்கை எதிர் கொள்ளாமல் தலைமறைவாக இருப்பது கோழைத்தனம் ஆகாதா?

அவரை அதிமுக தலைமையே அழைத்து வந்து காவல்துறையினரிடம் ஒப்படைத்திருந்தால் அரசியல் நாகரீகம் பேணப்பட்டு இருக்கும்.

ராஜேந்திர பாலாஜி உடனடியாக காவல் துறையிடமோ, நீதிமன்றத்திலோ சரணடைந்து வழக்கை எதிர்கொள்ள வேண்டும்.
அதுதான் நல்ல அரசியல்வாதிக்கு அழகு!

படிக்க வேண்டும்

spot_img