fbpx
Homeதலையங்கம்இயற்கை வேளாண்மை புரட்சி வெடிக்கட்டும்!

இயற்கை வேளாண்மை புரட்சி வெடிக்கட்டும்!

கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி நம் நாட்டு விவசாயிகளுக்கு ஓர் அழைப்பு விடுத்தார். ‘இயற்கை வேளாண்மைக்கு திரும்புங்கள்’ என்பதே அந்த அன்பான அழைப்பு. விவசாயிகளையும் நாட்டு மக்களையும் வியப்பில் ஆழ்த்திய மகிழ்ச்சியான அழைப்பு.

அனைத்து விவசாயிகளும் இயற்கை வேளாண்மைக்கு திரும்புவது என்ன சாதாரண விஷயமா? உடனடியாக நடந்து விடும் காரியமா? கடந்த 60 ஆண்டுகளாக உணவு உற்பத்தியில் தன்னிறைவு, உணவு பற்றாக்குறையின்மை ஆகியவற்றை மட்டுமே இலக்காக கொண்டு நச்சுத்தன்மை கொண்ட ரசாயன உரங்களையும், கொடிய நோய்களைத் தரக்கூடிய பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தும் பழக்கத்துக்கு விவசாயிகள் ஆளாகி விட்டனர். இதனை மாறி, மாறி வரும் ஆட்சியாளர்களும் ஊக்குவித்தே வந்துவிட்டனர்.

ஆனாலும் விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்கு மாறித்தான் ஆக வேண்டிய கட்டாய நிலை இப்போது உருவாகி இருக்கிறது. அதைத்தான் பிரதமரும் சுட்டிக்காட்டி இருக்கிறார். அவரது ஆசை படிப்படியாக நிறைவேற வேண்டுமானால், அது மத்திய, மாநில அரசுகள் கையில்தானிருக்கிறது.

வெறும் பேச்சோடு நின்றுவிடாமல், சிறப்புத் திட்டங்களை தீட்டி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். அப்போது தான் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் மீதான மோகத்தில் இருந்து விவசாயிகளை விடுவித்து இயற்கை வேளாண்மையை மீட்டெடுக்க வழிபிறக்கும்.

அதற்கு மத்திய, மாநில அரசுகள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை விவசாயிகளே பட்டியலிடுகின்றனர். மத்திய அரசு, ரசாயன இடுபொருள்களுக்கு வழங்கி வரும் மானியத்துக்கு நிகராக, இயற்கை விவசாயிகளுக்கும் மானியம் வழங்க வேண்டும்.

இயற்கை வேளாண் பல்கலைக்கழகங்களை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் தலா 10 இயற்கை வேளாண் கல்லூரிகளை உருவாக்க வேண்டும். அனைத்து ஆரம்பக்கல்வி பாடத்திட்டங்களிலும் இயற்கை வேளாண்மையை இடம்பெற செய்ய வேண்டும்.

இயற்கை விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகளுக்குத் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும். இயற்கை வேளாண்மைத்துறைக்கு எனத் தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு இதற்கான செயல்திட்டங்களைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவற்றையெல்லாம் செய்தால் தான் இந்திய விவசாயிகள் மிக விரைவாக இயற்கை விவசாயத்துக்கு திரும்பும் நிலை உருவாகும்.
பசுமைப்புரட்சி நடந்தது போல இயற்கை வேளாண்மைப் புரட்சியும் விரைவில் வெடிக்கட்டும்!

படிக்க வேண்டும்

spot_img