fbpx
Homeதலையங்கம்இருபது போலி பல்கலைக்கழகங்கள்!

இருபது போலி பல்கலைக்கழகங்கள்!

இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் 20 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக யுஜிசி (பல்கலைக்கழக மானியக்குழு) அறிவித்துள்ளது.

இந்த பல்கலைக்கழகங்கள் பட்டங்களை தாராளமாக வழங்கி வருகின்றன. அந்தப் பட்டங்கள் மூலம் வேலைவாய்ப்பு பெற முடியாது. மேற்கல்வி படிக்க முடியாது.
ஆனால் அப்பாவி மாணவ, மாணவிகள் போலி பல்கலைக்கழகங்களில் படித்து அங்கீகாரமே இல்லாத பட்டத்தை பெறுகின்றனர். சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்டாற்போல பணத்தை செலவழித்து, ஒருசில ஆண்டுகளை விரயம் செய்து வாழ்க்கையையே தொலைத்து விடுகின்றனர்.

போலி பல்கலைக்கழகங்கள் பட்டியலில் டெல்லி கொடிகட்டி பறக்கிறது. டெல்லியில் அகில இந்திய பொது மற்றும் உடல்நல அறிவியல் நிறுவனம், இந்திய அறிவியல் மற்றும் பொறியில் நிறுவனம், வணிக பல்கலைக்கழகம், தர்யாகஞ்சு கமர்ஷியல் யுனிவர்சிட்டி, ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம், அத்யாத்மி’ விஸ்வவித்யாலயா, ஏடிஆர் உள்ளிட்ட 8 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதேபோல புதுச்சேரியில் ஸ்ரீ போதி அகாடமி ஆப் ஹையர் எஜூகேஷன், கேரளாவில் செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம், கர்நாடகாவில் பெல்காம் பல்கலைக்கழகம் என நாடு முழுவதும் 20 போலி பல்கலைக்கழகங்களை யுஜிசி பட்டியலிட்டு அவற்றில் சேர வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது.

புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
இதுபோன்ற போலி பல்கலைக்கழகங்களை நம்பி ஏமாந்து போவது பெரும் ஏழ்மையான, கிராமப்புற மாணவர்கள் தான்.

யுஜிசி ஒவ்வொரு ஆண்டும் இதேபோல போலி பல்கலைக்கழகங்களைப் பட்டியலிட்டு எச்சரிக்கை மணியை அடித்துக் கொண்டு தானிருக்கிறது. போலி பல்கலைக்கழகங்ளும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அவை அனைத்தும் பணம் பறிப்பது ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ளன.

எச்சரிக்கை மணியோசை எட்டாத நிலையில் தான் தொடர்ந்து மாணவ, மாணவிகள் போலி பல்கலைக்கழகங்களில் சேர்ந்து தங்கள் வாழ்க்கையைத் தொலைக்கின்றனர்.

இந்த கொடுமை நடக்கலாமா? நடக்க விடலாமா?
இவை இவை போலி பல்கலைக்கழகங்கள் என்று அடையாளம் காட்டும் யுஜிசி அந்த போலிகளை தாமே முன்வந்து அவை செயல்படாத அளவிற்கு முடக்க முடியாதா? எச்சரித்தால் மட்டும் போதுமா?

உணவு தரமாக இல்லை என்றால் உடனடியாக அந்த ஓட்டலை மூடி சீல்வைக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அப்படியிருக்க, மாணவ, மாணவிகளின் வாழ்க்கையையே புதைகுழிக்குள் தள்ளும் இந்த போலி பல்கலைக்கழகங்களுக்கு சீல் வைக்க முடியாதா? அடியோடு முடக்க முடியாதா?

உதாரணத்திற்கு இந்த இடங்களில் செயல்படுவதெல்லாம் கள்ளத் துப்பாக்கி தொழிற்சாலைகள். அங்கு துப்பாக்கிகளை வாங்கி ஏமாறாதீர்கள் என காவல்துறை எச்சரிக்கை விடுக்குமா?

எங்காவது கள்ளத்துப்பாக்கி தயாரிக்கப்படுவதாக தகவல் வந்தால், புகாருக்காக காவல்துறை காத்திருக்காமல் அதிரடி நடவடிக்கை எடுத்து கள்ளத் துப்பாக்கி ஆலையை இருந்த இடம் தெரியாமல் ஆக்கி விடுவார்கள் அல்லவா?

அதேபோல மாணவர்களின் புகார்களுக்கு காத்திராமல் போலி பல்கலைக்கழகங்களுக்கு மூடுவிழா நடத்தும் ஏற்பாட்டை ஒன்றிய அரசுடன் கலந்தாலோசித்து யுஜிசி செய்ய வேண்டும்.

போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட அவைகளில் ஒன்றுகூட அடுத்த ஆண்டு இருக்கக் கூடாது.

களமிறங்கி தன் கடமையைச் செய்யுமா யுஜிசி?

படிக்க வேண்டும்

spot_img