அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த ஓராண்டாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இதுவரை எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோர் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடந்து முடிந்துள்ளது.
இந்த சோதனைகளை எல்லாம் நடத்திக் கொண்டிருப்பது மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தான். இந்த நிலையில் தான், கோவையில் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான சந்திரசேகரின் வீடு, அவரது தந்தை வீடு, நண்பர்கள் வீடு என ஆறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
நேற்று மூன்றாவது நாளாக இந்த சோதனை தொடர்ந்தது. ஆனால் இந்த சோதனையை நடத்தியது மாநில அரசின் லஞ்ச ஒழிப்பு போலீசார் அல்ல. யாரும் எதிர்பாராதவிதமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் தான் திடீரென களமிறங்கி சோதனை நடத்தி இருக்கிறார்கள்.
மத்திய அரசோடு இணக்கம் பாராட்டும், டெல்லியின் குரலுக்கு ஓடோடி செவிமடுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்றுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கும் எஸ்.பி.வேலுமணிக்கும் செக் வைக்கும் விதமாகவே இந்த வருமான வரித்துறை ரெய்டு நடந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதில் கவனிக்கத் தக்க மற்றொரு விஷயம் என்னவென்றால் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜுக்கும், ஒப்பந்ததாரர் செய்யாதுரைக்கும் சென்னை மயிலாப்பூரில் இருக்கும் ஜிபிஏ கன்சல்டன்சி என்ற நிறுவனம் தான் ஆடிட்டிங் வேலைகளை பார்க்கிறது.
இந்த நிறுவனத்தில் இரு நாள்களாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வரும் நிலையில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளும் சென்றுள்ளனர். ஒரே இடத்தில் இரு துறை அதிகாரிகளும் சேர்ந்து சோதனை செய்துள்ளனர்.
ஒரே நேரத்தில் மத்திய அரசின் அதிகாரிகளும், மாநில அரசின் அதிகாரிகளும் அதிமுகவை வட்டமிட்டுள்ளது அதிமுக வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்தளத்துக்கு இருபுறமும் அடி என்பதைப் போல எடப்பாடி பழனிசாமி தரப்பு இருமுனை தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறது.
இதனை எப்படி சமாளிக்கப் போகிறார், எடப்பாடி பழனிசாமி?



