பொதுத்துறை நிறுவனங்களுக்குச் சொந்தமான கட்டிடங்களை, நிலையங்களை, நிலங்களை விற்று ரூபாய் ஆறு லட்சம் கோடி அளவுக்கு நிதி திரட்டுவது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இந்த பணம், புதிய திட்டங்களை தொடங்குவதற்கும், உள் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் பயன்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார். தமிழக விமான நிலையங்கள், ஊட்டி மலை ரயில் உள்பட ரயில் நிலையங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை தனியாரிடம் குத்தகைக்கு விடும் நடவடிக்கையில் மத்தியஅரசு முனைப்பு காட்டி வருகிறது.
ஏற்கனவே 2022 முதல் 2025 வரையிலான இந்த காலக்கட்டத்தில், தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் உள்ள 15 ரயில்நிலையங்கள், 25 விமான நிலையங்கள், 160 சுரங்கங்கள் தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட உள்ளன.
இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் திருச்சி விமான நிலையம் முதலில் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட உள்ளது.
அதைத் தொடர்ந்து மதுரை, கோவை விமான நிலையங்களும் அடுத்தபடியாக சென்னை விமான நிலையமும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. பாரம்பரியம் மிக்கதும், சுற்றுலா தலமான ஊட்டியில் இயங்கும் மலை ரயில் மற்றும் சென்னை ரயில் நிலையங்களும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இந்தியாவிலேயே அதிக வருவாய் பெற்றுத்தரும் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தையும் தனியாரிடம் ஒப்படைக்க மோடி அரசு முடிவு செய்து உள்ளது. இதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் 491 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலைகளையும் தனியாரிடம் ஒப்படைக்கிறது.
மோடி தலைமையிலான மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார். மற்ற எதிர்க்கட்சிகளும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
ரூ.6 லட்சம் கோடி கிடைக்கும் என்கிற ஒரே காரணத்துக்காக இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்வது எப்படி நியாயமாகும்? அரசுக்கும், பொதுத்துறைக்கும் சொந்தமான மக்களின் சொத்துகளைத் தனியாருக்கு விற்பது மக்களின் சொத்துகள் மீது அரசே நடத்தும் சட்டபூர்வ கொள்ளை என்றே தோன்றுகிறது.
இது நாட்டின் சுயசார்பை ஆணிவேருடன் பிடுங்கி எறியும் நடவடிக்கையாகும். மக்கள் உரிமை பெற்ற பொதுச் சொத்துகளை விற்பதை மத்திய அரசு கைவிடுமா? அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து செயல்பட வேண்டும். செய்யுமா, மோடி அரசு?



