மத்தியப் பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தில் உள்ள பதாரியா தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராம்பாய் சிங். இவர் தனது தொகுதிக்குட்பட்ட ஒரு கிராமத்துக்கு சென்ற போது அவரிடம் அக்கிராம மக்கள் ஒரு புகார் கூறியுள்ளனர்.
அதாவது பிரதம மந்திரி ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு பஞ்சாயத்து அதிகாரிகள் ரூ.5000 முதல் ரூ.9000 வரை லஞ்சம் பெறுவதாகத் தெரிவித்தனர்.
உடனே அதிகாரிகளிடம் கிராம மக்களிடம் பெற்ற பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் படி எம்எல்ஏ ராம்பாய் சிங் கூறினார். பின்னர் ‘நீங்கள் உணவில் சேர்க்கப்படும் உப்பு போல ரூ.500, 1000 பெறலாம். ஆனால் மக்களின் சாப்பாட்டுத் தட்டையே பறிக்கக் கூடாது!’ என்றார்.
இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் பரவியது. இது தொடர்பாக எம்எல்ஏ ராம்பாய் சிங்கிடம் நிருபர்கள் கேட்ட போது, ‘நான் இந்த பிரச்சினையை உடனே தீர்க்க விரும்பினேனே தவிர அதிகாரிகள் மீது புகார் கொடுக்கவில்லை.
பஞ்சாயத்து ஊழியர்கள் குறைவான சம்பளம் பெறுபவர்கள்.
எனவே மக்கள் தாமாக விரும்பித் தரும் சிறு தொகையைப் பெறலாம்.
வலுக்கட்டாயமாக, லட்சக்கணக்கில், ஆயிரக்கணக்கில் பறிக்கக்கூடாது என்று தான் சொன்னேன்!’ என சர்வசாதாரணமாகக் கூறினார்.
பெண் எம்.எல்.ஏவின் இந்த சர்ச்சைப் பேச்சு மக்கள் மத்தியில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.



