ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு பிறப்பதற்கு முந்தைய நாள், எப்படி அடுத்த ஆண்டைத் தொடங்கப் போகிறோம் என்பதை பற்றி யோசித்து கொண்டு இருப்போம்.
அதிலும் குறிப்பாக எங்கெல்லாம் சென்று புத்தாண்டை கொண்டாடலாம் என்று சில திட்டங்களை வைத்திருப்போம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் முன்பை போன்று கொண்டாடப்படவில்லை.
முன்பெல்லாம் இரவு முழுவதும் சிறப்பான முறையில் ஆடிப்பாடி பல இடங்களுக்கும் சென்று புத்தாண்டை வரவேற்போம்.
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாகக் குறைந்து வந்ததால், மக்கள் சகஜநிலைக்கு திரும்பி இருந்தனர். முக கவசம், சமூக இடைவெளியை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு புத்தாண்டு 2022ஐ வரவேற்றுக் கொண்டாட தயாராகி வந்தனர்.
ஆனால் தற்போது கொரோனாவின் திரிபான ஒமைக்ரான் பெருந்தொற்று பரவி வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
எனினும் உங்களின் அன்புக்குரியவர்களுடன் இந்த புத்தாண்டை சிறப்பான முறையில் கொண்டாடி மகிழாமல் இருந்துவிட முடியுமா? எனவே, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து இந்த புத்தாண்டை ஜாக்கிரதையாகக் கொண்டாடுங்கள்.
புத்தாண்டு பிறப்பதற்கு முன்னால் மாலை நேரத்தில் இருந்தே கொண்டாட்டங்கள் தொடங்கி விடும். கொண்டாட்டத்தை வீட்டிற்கு வெளியில் சென்று தான் செய்ய வேண்டும் என்று அவசியம் கிடையாது.
வீட்டிற்குள் இருந்து கொண்டே புது விதமாகவும் கொண்டாடலாம். உங்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உங்கள் அன்புக்குரியவர்கள் ஆகியோரை உங்களது வீட்டிற்கு அழைத்து சந்தோஷமாக இந்த புத்தாண்டை வரவேற்கலாம். கேக் வெட்டி பகிர்ந்துண்டு மகிழலாம்.
எல்லோரும் சேர்ந்து நல்ல பொழுதுபோக்கான திரைப்படங்களை பார்க்கலாம். மேலும் எல்லோருக்கும் பிடித்தமான சிறு சிறு விளையாட்டுகளை குழந்தைகளுடன் விளையாடலாம். வீட்டிலேயே பிடித்த உணவுகளை செய்து பரிமாறலாம்.
இப்படியெல்லாம் செய்வதால் புத்தாண்டை முழுமையான உணர்வுடன் வரவேற்க முடியும். வரும் ஆண்டிலாவது கொரோனா பெருந்தொற்று அடியோடு ஒழிந்து நாடும் வீடும் நலன்பெற இறைவனை பிரார்த்திப்போம்.
புத்தாண்டு நல்வாழ்த்துகள்!



