பிரதமர் நரேந்திர மோடி வருகிற 12ம் தேதி வருகிறார். அன்றைய தினம் மதுரையில் நடைபெறும் ‘மோடி பொங்கல்’ என பெயர் சூட்டப்பட்டுள்ள பொங்கல் விழாவிலும் விருதுநகரில் நடைபெறும் 11 மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழாவிலும் அவர் பங்கேற்கிறார்.
பிரதமருக்கு தமிழ் மீது எப்போதும் ஓர் பற்று உண்டு. அடிக்கடி அவர் திருக்குறள் மட்டுமின்றி புறநானூறு உள்ளிட்ட பிற தமிழ் இலக்கியங்களில் இருந்து மேற்கோள் காட்டி பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். வட மாநில நிகழ்ச்சிகளிலும் கூட தமிழின் பெருமையை பேசி இருக்கிறார்.
அப்படிப்பட்ட பிரதமர், தமிழகத்தில் நடக்கும் உழவர் திருநாளாம் பொங்கல் விழாவில் பங்கேற்பது தமிழ்நாட்டிற்கே பெருமை தரக்கூடியது.
அதேசமயம் உழவர் திருநாளில் பங்கேற்க வரும் பிரதமருக்கு ஒரே ஒரு கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு உழவர் பெருமக்களின் மனம் விளைகிறது. அது என்ன? சமீபத்தில் கனமழை, வெள்ளம் தமிழகத்தையே புரட்டி போட்டது.
பெருத்த சேதம் ஏற்பட்டது. நெல் உள்ளிட்ட வேளாண் பயிர்கள் பல லட்சம் ஏக்கர் நீரில் மூழ்கி நாசமாயின. அந்த இழப்பில் இருந்து மீள முடியாமல் இன்னும் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவர்கள் என்ன எதிர்பார்க்க போகிறார்கள்?
மத்திய குழு வந்து மழைச்சேதத்தை கண்டறிந்து சென்றது.
மழை – வெள்ளச் சேதத்துக்கு நிவாரணமாக மத்திய அரசிடம் 4,626 கோடி கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். ஓரிரு தினங்களுக்கு முன்பு கூட பிரதமருக்கு நினைவூட்டல் கடிதத்தை அவர் எழுதியுள்ளார். மத்திய நிதி கிடைத்தால் தான் உரிய நிவாரண நிதி முழுமையாக கிடைக்கும் என உழவர்கள் நம்புகின்றனர்.
பிரதமர் மோடி தமிழகத்துக்கான நிதியை ஒதுக்கீடு செய்து அறிவித்துவிட்டு, தமிழகத்தில் பொங்கல் விழாவில் பங்கேற்றால் அதுவே அந்த விழாவிற்கு மகுடம் வைத்தாற்போல் அமையும் என்பதில் ஐயமில்லை. தமிழக பாஜக தலைவர்கள் இதனை பிரதமருக்கு நினைவூட்ட வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்களே… வருக வருக!



