சென்னையில் பண்ருட்டி ராமச்சந் திரனை சசிகலா சந்தித்தார். பண்ருட்டி ராமச்சந்திரன் வீட்டிற்கு சென்ற சசிகலா அவரிடம் 40 நிமிடம் ஆலோசனை செய்தார். அவரிடம் உடல்நலம் பற்றி விசாரித்தார்.
பழைய கால அதிமுக குறித்து பல முக்கிய விஷயங்களை இவர்கள் ஆலோசனை செய்தனர். இதில் பல முக்கியமான அரசியல் விவகாரங்கள் பேசப்பட்டுள்ளன.
சசிகலாவை இப்படி பண்ருட்டி ராமச்சந்திரன் சந்திக்கும் முன் கடந்த ஜூன் மாதமே ஓ. பன்னீர்செல்வத்தை பண்ருட்டி ராமச்சந்திரன் சந்தித்தார்.
ஒற்றை தலைமை விவகாரம் உச்சத்தில் இருந்த போது பண்ருட்டி ராமச்சந்திரன் &- ஓபிஎஸ் இடையில் சந்திப்பு நடந்தது. அப்போதே சசிகலாவை சேர்த்துக்கொண்டு ஒன்றாக எடப்பாடியை எதிர்க்கும்படி ஓபிஎஸ்ஸுக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் ஆலோசனை வழங்கியதாக கூறப்பட்டது. ஓபிஎஸ்- சசிகலா – டிடிவி.தினகரன் கூட்டணியை உருவாக்க பண்ருட்டி ராமச்சந்திரன் முயன்றதாக அப்போதே செய்திகள் வந்தன.
ஜூன் மாதம் இரண்டாம் வாரம் இந்த சந்திப்பு நடந்த நிலையில்தான் தற்போது சசிகலா & பண்ருட்டி ராமச்சந்திரன் இடையிலான சந்திப்பு நடந்து உள்ளது.
முந்தைய சந்திப்பிற்கும் இந்த சந்திப்பிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பில் டிடிவி,- சசிகலா, – ஓபிஎஸ் இணைந்து செயலாற்றுவதின் முக்கியத்துவம் பற்றி பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் முக்குலத்தோர் வாக்குகள் ஒன்று சேரும். இதனால் அதிமுகவில் கண்டிப்பாக இரண்டு அணி உருவாகும். எடப்பாடிக்கு இது சிக்கலை ஏற்படுத்தும்.
வெறும் கொங்கு மண்டலத்தை மட்டும் வைத்துக்கொண்டு எடப்பாடி நீண்ட காலம் அதிமுகவை கட்டுப்படுத்த முடியாது. கொங்கிலும் கூட பல தலைவர்கள் எடப்பாடி மீது பொறாமையில் இருக்கிறார்கள் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் சசிகலாவிற்கு அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.
சசிகலா இப்படி திடீரென பண்ருட்டி ராமச்சந்திரனை பார்ப்பதற்கும், திடீரென அதிமுக பற்றி பேட்டி கொடுப்பதற்கும் பின்புலத்தில் டெல்லி (பாஜக) அவருக்கு கொடுத்த கிரீன் சிக்னல்தான் காரணம் என்ற பேச்சும் அடிபடுகிறது.
அதாவது சசிகலாவிற்கு டெல்லி ஆதரவாக செயல்படுவதாக தகவல்கள் வரத் தொடங்கி உள்ளன. எடப்பாடி மீது டெல்லி பாஜக தலைகள் அதிருப்தியில் உள்ளனர். எடப்பாடி தன்னிச்சையாக செயல்படுவதையும் சுயமாக அதிமுகவின் ஒற்றை தலைமை என்று கூறுவதையும் டெல்லி விரும்பவில்லை.
இதனால் எடப்பாடிக்கு எதிராக ஓபிஎஸ் – சசிகலா ஆகியோரை களமிறக்க டெல்லி முடிவு செய்துள்ளது. இதனால் சசிகலாவிற்கு டெல்லியின் ஆசி கடைசியாக கிடைத்துள்ளது என்கிறார்கள் பாஜக வட்டாரத்தினர்.
தமிழ்நாட்டு அரசியலில் பாஜகவின் எதிர்கால திட்டங்களுக்கு எடப்பாடி செட்டாக மாட்டார் என்பதால் சசிகலாவை டெல்லி பாஜக களமிறங்க சொல்லி உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதனால்தான் சசிகலா அடுத்தடுத்து பல்வேறு நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.
அதிமுகவில் என்ன தான் நடக்கப் போகிறது? பார்க்கத்தானே போகிறோம்!



