நிகழ் கல்வியாண்டில் உள் ஒதுக்கீடு மூலம் பொறியியல் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்கள் சுமார் 12 ஆயிரம் பேர் பயன்பெறுவர்.
அதேபோன்று அரசு பள்ளிகளில் பயின்ற சுமார் 350 மாணவர்கள் வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம் மற்றும் சட்டப்படிப்புகளிலும் பயன்பெறுவர். இந்த மாணவர்கள் மூலமாக அவர்களது குடும்பமும், அவர்களது ஊரும் முன்னேற்றப்பாதைக்கு அழைத்து செல்லப்படுகிறது.
இதன்மூலமாக அவர்களது தலைமுறை தலைநிமிர்ந்து நிற்க போகிறது. அதன்மூலமாக இந்த மாநிலம் பயன் அடைய போகிறது. இப்படிப்பட்ட நிலையில் கல்வி ஆணை வழங்குவதில் நான் எனக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
இது பாராட்டி வரவேற்கத்தக்கது. இந்த 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் தொழில் படிப்புகளில் கல்லூரியில் சேரக்கூடிய மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் மனம் மகிழக்கூடிய வகையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் தொழில் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுடைய கல்விக்காக ஆகக்கூடிய செலவு, கல்விக்கட்டணம், விடுதிக்கட்டணம், கலந்தாய்வு கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் இந்த அரசு ஏற்றுக்கொள்ளும்.
இதற்காக ஆண்டுக்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளது மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.



