fbpx
Homeதலையங்கம்நியாயமில்லாத முட்டுக்கட்டை!

நியாயமில்லாத முட்டுக்கட்டை!

தமிழ்நாட்டில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு நடப்பு ஆண்டு முதல் கொடுக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசிடம் உரிய விளக்கம் கேட்டுள்ள நிலையில், ஒன்றிய அரசின் மத்திய சுகாதாரத்துறை அவசர அவசரமாக 8.2.2022 அன்று 100 சதவீதம் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் தானே கலந்தாய்வு நடத் துவதற்கான ஆணையைப் பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 20 வகையான உயர்சிறப்புப் படிப்புகளில் 369 இடங்கள் உள்ளன. 2017-ம் ஆண்டு வரை இந்த இடங்களை தமிழக அரசுதான் நிரப்பி வந்தது.

ஆனால், 2017-ம் ஆண்டு முதல் இந்த இடங்கள் அனைத்தையும் மத்திய அரசே எடுத்துக் கொண்டு நிரப்பி வருகிறது. அந்த இடங்களில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீட்டையும் மத்திய அரசு ரத்து செய்துவிட்டது.

அதனால், உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் பெரும்பான்மையான இடங்களை பிற மாநில மருத்துவர்கள் கைப்பற்றிக் கொள்கின்றனர்; தமிழக மருத்துவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

இதன் மூலம் தமிழ்நாடு அரசு மருத்துவமனை களில் எதிர்காலத்தில் உயர்சிறப்பு மருத்துவ வல்லுனர்கள் போதிய அளவில் இல்லாமல் போகும் நிலை உருவாகி விடும் என தமிழக தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு உயர்சிறப்பு மருத்துவக் கல்வி இடங்களில் 50% இட ஒதுக்கீடு வழங்குவதை உச்சநீதிமன்றமும் எதிர்க்கவில்லை.

2017-ஆம் ஆண்டில் மருத்துவ மேற்படிப்பு, உயர்சிறப்பு மருத்துவப் படிப்பு ஆகியவற்றில் அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசு மருத்துவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு சட்ட அதிகாரம் உண்டு என்று தீர்ப்பளித்துள்ளது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு இப்போது மீண்டும் தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல், உயர்சிறப்பு படிப்புகளிலும் தனி இட ஒதுக்கீடு வழங்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ள நிலையில், அதற்கு மத்திய சுகாதார அமைச்சகம் முட்டுக் கட்டை போடுவது நியாயமும் அல்ல; சமூக நீதியும் அல்ல. இது நீதிமன்ற அவமதிப்பும், உரிமைப் பறிப்பும் ஆகும்.

அந்த உரிமையை மத்திய அரசு பறித்துக் கொள்வதை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது. மருத்துவர்களுக்கு உயர்சிறப்பு படிப்புகளில் 50% இடங்கள் ஒதுக்கப்படுவதை உடனடியாக உறுதி செய்ய வேண்டும்.

படிக்க வேண்டும்

spot_img