fbpx
Homeதலையங்கம்நாடெங்கும் எதிரொலிக்கும் ஸ்டாலினின் கேரள முழக்கம்!

நாடெங்கும் எதிரொலிக்கும் ஸ்டாலினின் கேரள முழக்கம்!

பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் மாநில அரசுகளின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவது தான் ஒன்றிய அரசின் முக்கியப் பணியாக இருப்பதாக ராகுல்காந்தி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்டு) கட்சி மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உணர்ச்சிமிகு உரையாற்றி இருக்கிறார். அங்கே அவர் மாநில உரிமைகளை மீட்டெடுக்க முழங்கியிருப்பது, அகில இந்தியா முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை இருக்கும் போது, ஆளுநரைக் கொண்டு ஆட்சி செய்ய நினைப்பது பச்சைத்துரோகம் ஆகாதா? இது தான் சட்டத்தின் ஆட்சியா? என வினவிய மு.க.ஸ்டாலின் அதனை எதிர்த்துப் போராட அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

அதாவது மத்திய அரசு போடும் முட்டுக்கட்டைகளை தகர்த்தெறிய தென் மாநில முதல்வர்கள் குழு அமைக்க வேண்டும் என்றும் அவர் அறைகூவல் விடுத்துள்ளார். மாநில சுயாட்சிக் குரலை ஒலித்துவிட்டு வந்திருக்கிறார்.

“ஒரே நாடு, -ஒரே தேர்தல், ஒரே உணவு,- ஒரே தேர்வு,- ஒரே கல்வி,- ஒரே மதம், ஒரே மொழி,- ஒரே பண்பாடு, -ஒரே கலாச்சாரம்- என்று எல்லாவற்றையும் ஒரே..ஒரே..ஒரே… என்று கோரஸ் பாடுகிறார்கள். இப்படியே போனால் ஒரே கட்சி என்று ஆகிவிடும். ஒரே கட்சியானால் -ஒரே ஆள் என்று ஆகிவிடும். இதை விட ஆபத்தானது வேறு இருக்கமுடியாது.

இத்தகைய எதேச்சாதிகாரத்துக்கு எதிரான குரல்தான் ‘மாநிலத்தில் சுயாட்சி -& மத்தியில் கூட்டாட்சி’ என்பது ஆகும். மத்தியில் ஆளும் கட்சியே மாநிலத்திலும் ஆட்சிப்பொறுப்பில் இருந்தால் தாராள மனப்பான்மையுடனும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களாக இருந்தால் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனும் ஒன்றிய அரசு நடந்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

அதற்கான ஆதாரங்களையும எதிர்க்கட்சி முதல்வர்கள் எடுத்துரைக்கிறார்கள். ஆனாலும் ஒன்றிய & மாநில அரசுகளுக்கான மோதல் போக்கை தவிர்க்க முடியவில்லை.

இதனால் பாதிக்கப்படுவது யார் மாநில முதல்வர்களா? இல்லையே மக்கள் தானே. இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் மாநில அரசுகள் அதிக அதிகாரம் கொண்டவையாக மாற வேண்டும். அதற்கும் வழிகாட்டி இருக்கிறார், முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் தரும் வகையில் அரசியலமைப்பு சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என்பதே அவரது யோசனை மட்டுமல்ல, வேண்டுகோளும் ஆகும்.

தமிழக முதல்வரின் முழக்கம், ஒன்றிய அரசின் காதில் விழும்படியாக இந்தியா முழுவதும் எதிரொலிக்கட்டும்!

படிக்க வேண்டும்

spot_img