தற்கொலை தடுப்புக்கான சர்வதேச அமைப்பும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து தற்கொலை தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக பல நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகிறது.
தற்கொலை என்பது தடுக்க கூடியதே என்பது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதே இந்த அமைப்புகளின் பிரதான நோக்கம்.
நினைத்தது கிடைக்காவிட்டால், எதிர்பார்த்தது நடக்காவிட்டால், எதிர்பாராதது நடந்து விட்டால் மனமுடைந்து போவது மனித இயல்பு.
அந்த நுட்பமான நேரத்தில் ஆறுதல் சொல்ல நல்ல தோழமை இருந்து விட்டால் மனம் விபரீத முடிவை நாடாது.
எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு. தீர்வு இல்லாவிட்டாலும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வாழ முடியும் என்ற நம்பிக்கையை மனதில் ஆழமாக பதியவைத்துக் கொண்டால் எதையும் தாங்கும் இதயம் வாய்க்கப்பெறும்.
நம்மை சுற்றியுள்ளவர்கள் சோர்வாக இருக்கும்போதோ மனரீதியாக பாதிப்புக்குள்ளாகும் போதோ அவர்களுக்கு ஆறுதல் கூறி தன்னம்பிக்கையை தைரியத்தை கொடுக்கும் போது தற்கொலை எண்ணத்தில் இருந்து அவர்களை பாதுகாக்க முடியும்.
பிரச்சினைகளில் சிக்கி தவிக்கும் போதெல்லாம் நமக்கு நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதும், தயங்காமல் பிரச்சினைகளை கூறி ஆலோசனை கேட்பதும் நம் மனதில் விவரிக்க முடியாத தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தி வாழ்வை புத்துணர்ச்சியுடன் எதிர்கொள்ள ஊக்குவிக்கும்.
மற்றவர்களுக்கு நம்பிக்கை அளித்து நாமும் நம்பிக்கையுடன் வாழும் போது வாழ்க்கையே வசந்தமாகும்.



