நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடும் குற்றப் பின்னணியுள்ள வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. அது மட்டுமல்ல வெற்றி பெறும் குற்றப் பின்னணி வேட்பாளர்கள் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கிறது.
2019 நாடாளுமன்ற தேர்தலில் தேர்வான அனைத்து கட்சிகளைச் சேர்ந்த 233 எம்.பிக்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதாவது, 43 சதவீத எம்.பிக்கள் கிரிமினல் குற்றச்சாட்டு பின்னணி கொண்டவர்கள். கடந்த தமிழக சட்டப்பேரவை (2021) தேர்தலில் போட்டியிட்ட 13 சதவீத வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தன.
தேர்தலில் குற்றப் பின்னணி உடைய வேட்பாளர்கள் போட்டியிடுவது என்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக தேர்தலில் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்து அரசியல்கட்சிகள் நாளிதழில் விளம்பரம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
தற்போது பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளரை தேர்வு செய்ததற்கான காரணத்தையும், குற்றப் பின்னணி இல்லாத நபரை வேட்பாளராகத் தேர்வு செய்ய முடியாமல் போனதற்கான காரணத்தையும் அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும் என்று ஓர் உத்தரவை இந்திய தேர்தல் ஆணையம் தற்போது பிறப்பித்துள்ளது.
குற்றப் பின்னணி உடைய வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தல் ஆணையம் தனது பிடியை இறுக்கியுள்ளது. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்ட வேட்பாளர்கள் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள், அவர்கள் மீதான குற்றத்தின் தன்மை ஆகியவற்றை அந்தந்த அரசியல் கட்சிகள் வலைதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது.
குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் கேட்டுள்ள விபரங்களை ஒரு பிராந்திய மொழி பத்திரிகை மற்றும் ஒரு தேசிய பத்திரிகையிலும், தங்களின் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும்.
இந்தத் தகவல்களை வேட்பாளரைத் தேர்வு செய்த 48 மணி நேரத்துக்குள் வெளியிட வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளது.
ஆனாலும் கட்சி பேதமில்லாமல் பிரதான அரசியல் கட்சிகளும் குற்றப் பின்னணி உடைய நபர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்புகளை வழங்கப்போவது நிச்சயம். குற்றப் பின்னணி வேட்பாளர்களை தேர்தல் களத்தில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என்ற சமூக ஆர்வலர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிட தேர்தல் ஆணையத்தின் தற்போதைய அதிரடி நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
குற்றப் பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடவே முடியாது என்ற நிலை என்றைக்கு உருவாகிறதோ அன்று தான், மாபெரும் ஜனநாயக நாடான இந்தியாவின் பெருமை உலக அரங்கில் உச்சத்தைத் தொடும் உயரிய நாளாக அமையும் என்பது திண்ணம்.
அதே நேரத்தில் அரசியல் கட்சிகள் தாமாக முன்வந்து இந்த நல்ல காரியத்தைச் செய்யுமா? அது ஒருபோதும் நடக்காது.
ஆனால் அதனை நடத்திக்காட்டும் அதிகாரம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. உச்சநீதிமன்றத்துக்கு இருக்கிறது.
விரைவில் அந்த பொன்னாள் மலரட்டும்!



