இந்திய நீதிமன்றங்களில் மாநில மொழி பயன்பாடு வரவேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. கடந்த காலங்களில் அதற்கான முயற்சிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டன.
ஆனால் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்ட நிலையில், நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் உள்ளூர் மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி திருவாய் மலர்ந்திருக்கிறார்.
அதற்கான நேரம் வந்து விட்டதாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் ரமணாவும் ஆமோதித்திருக்கிறார். ஒரே மேடையில் இருவரும் ஒரே கருத்தைத் தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்தி, சமஸ்கிருதத்தை மாநிலங்களில் திணிக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு முனைப்பு காட்டி வரும் சூழலில் பிரதமர் இவ்வாறு பேசியிருப்பது எதிர்க்கட்சிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தினாலும் வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
இது வெறும் வார்த்தையோடு நின்றுவிடக்கூடாது. நிறைவேற்றித்தர வேண்டிய பெரும் கடமை பிரதமர் மோடியை வந்தடைந்திருக்கிறது.
இது ஒருபுறமிருக்க, சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக செந்தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
2006ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர், உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகத் தமிழை அங்கீகரிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். ஏனோ இதுவரை நிறைவேற வில்லை.
ஆனால் மத்திய பிரதேசம், பீகார், உள்ளிட்ட சில மாநிலங்களின் உயர்நீதிமன்றத்தில் இந்தி வழக்காடு மொழியாக நடைமுறையில் இருந்து வருகிறது.
அங்கு மட்டும் சாத்தியமாவது, தமிழகத்தில் சாத்தியமாகாதா? அதற்கான சாத்தியக்கூறுகள் இப்போது தென்படுகிறது.
ஆம்; பிரதமர் மோடியும் தலைமை நீதியரசர் ரமணாவும் உள்ளூர் மொழிகளில் நீதிமன்ற விசாரணைகள் நடத்தப்படும் என்று அறிவித்து இருப்பது நல்லதொரு திருப்பம்.
இந்த சந்தர்ப்பத்தை தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகத் தமிழை அறிவிக்கத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
ஒன்றிய அரசும் உச்சநீதிமன்றமும் பச்சைக் கொடி காட்டியபின் வேறு என்ன தடை வரப்போகிறது?
தடைகளை உடைத்தெறிந்து சாதனை படைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழன்னைக்கு புதியதோர் மகுடம் சூட்டுவார் என்பதில் சந்தேகமில்லை.
விரைவில் அந்த பொன்னாள் மலரட்டும்!



