fbpx
Homeதலையங்கம்சைலேந்திர பாபுவின் சரியான நடவடிக்கை!

சைலேந்திர பாபுவின் சரியான நடவடிக்கை!

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என்.குணசேகரன். இவர் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கட்டப் பஞ்சாயத்து , அடிதடி, கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 42 வழக்குகள் நிலுவையில் உள் ளன.


தற்போது தலைமறைவாகியுள்ள குணாவை கைது செய்ய காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. படப்பை குணா தலைமறைவாக இருந்த நிலையில் அவரது மனைவி எல்லம்மாளை கடந்த 9-ம் தேதி கூடுதல் எஸ்.பி வெள்ளத்துரை தலைமையிலான காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்தனர்.

இதற்கிடையில், குணாவின் மனைவி எல்லம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், ‘தனது கணவரைக் காவல்துறையினர் என்கவுண்டர் செய்யக் கூடாது` என்று குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், ‘குணாவை என்கவுண்டர் செய்யும் திட்டம் இல்லை.

அவர் சரணடையும் பட்சத்தில் காவல்துறை விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுவார் என காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.


இந்தநிலையில், படப்பை குணாவுக்கு உதவி செய்ததாக மூன்று காவல் ஆய்வாளர்கள் அதிரடி பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, மணிமங்கலம் காவல் ஆய்வாளர் பாலாஜி, ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் ராஜாங்கம் ஆகிய 3 காவல் ஆய்வாளர்கள், பிரபல ரவுடி படப்பை குணாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் டி.ஜி.பி சைலேந்திர பாபு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.


காவல் ஆய்வாளர்கள் மட்டுமல்லாது, ஏ ப்ளஸ் நிலை ரவுடியான படப்பை குணாவிற்கு பலவிதமான வழிகளில் உதவி செய்த 8 காவலர்கள், 10 முதன்மை காவலர்கள், 15 தலைமை காவலர்கள், 4 உதவி ஆய்வாளர்கள், 3 காவல் ஆய்வாளர்கள் என 40 பேரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.


காஞ்சிபுரம் எஸ்.ஐ அசோகசக்கரவர்த்தி ராமநாதபுரம் மாவட்டத்துக்கும், வாலாஜாபாத் காவல்நிலைய எஸ்.ஐ எல்.வெங்கடேசன் மற்றும் எஸ்.வி சத்திரம் எஸ்.ஐ விஜயகாந்த் ஆகிய இருவரும் விருதுநகர் மாவட்டத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.


பணியிடம் செய்யப்பட்ட 40 பேர்களும் வெகுதூரத்தில் உள்ள சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


டிஜிபி சைலேந்திரபாபுவின் இந்த நடவடிக்கை போலீசார் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதேநேரத்தில் இடமாற்றலோடு நின்றதே என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டுள்ளனர்.


ரவுடிகளோடு உறவு வைக்கும் அளவிற்கு தவறு செய்யும் போலீசாருக்கு இது ஓர் எச்சரிக்கை மணி என்றே கருதப்படுகிறது. ரவுடிகளுக்கு காவல் காப்பது போன்ற சட்டவிரோத வேலையை விட்டு விட்டு மக்களுக்கு காவல் காக்கும் வேலையை மட்டும் செய்ய ஒரு வாய்ப்பை டிஜிபி வழங்கி இருக்கிறார். ஒரு சிலர் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் கெட்டப்பெயர் ஏற்பட்டுவிடக் கூடாது அல்லவா?.


டிஜிபி சைலேந்திரபாபுவின் இந்த நடவடிக்கையைப் பொதுமக்கள் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நடவடிக்கை போதாது, குறைந்தபட்சம் தற்காலிக பணிநீக்கமாவது செய்திருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எண்ண ஓட்டமாக இருக்கிறது.


அடுத்து அதுவும் நடக்கக் கூடும்; எச்சரிக்கை!

படிக்க வேண்டும்

spot_img