இந்திய விடுதலையின் 75-ஆவது ஆண்டு கொண்டாடப்படுகிறது. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசு சார்பில் வேலுநாச்சியார், பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் உருவப்படங்கள் அடங்கிய ஊர்தி பங்கேற்க இருந்தது. ஆனால், தமிழக அரசின் அந்த ஊர்தி மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது தமிழர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தருவதாக உள்ளது.
அதற்காக கூறப்படும் காரணம் என்ன தெரியுமா? தமிழ்நாட்டு சுதந்திரப்போராட்ட வீரர்களை வெளிநாட்டுத் தலைவர்களுக்கு தெரியாதாம். இந்த வாதம் ஏற்கக்கூடியதாக இல்லை. சொத்தையான இந்த வாதம், தமிழ்நாட்டு சுதந்திர போராட்டத் தியாகிகளை உதாசீனப்படுத்துவதற்குச் சமமாகும்.
தமிழக அரசின் அலங்கார ஊர்தியை டெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க அனுமதி தரவேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.
வேலுநாச்சியாரையும், வஉசியையும் நிராகரித்து விட்டு கோட்சேக்களுக்கும், கோல்வார்கர்களுக்கும் அனுமதி கொடுக்க உள்ளீர்களா? என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
வ.உ.சியின் 150 வது ஆண்டு விழா இப்போது கொண்டாடப்படுகிறது. பாரதியார் உலகறிந்த கவிஞர். வேலுநாச்சியாரின் வீரத்தை அண்மையில் தான் பிரதமர் பாராட்டியிருந்தார். மருது சகோதரர்கள் வேலுநாச்சியாரின் போராட்டத்தை தொடர்ந்தவர்கள்.
இவற்றை விட வேறு என்ன தகுதி வேண்டும்? என்று துளைத்தெடுக்கும் கேள்விக் கணையை டாக்டர் ராமதாஸ் தொடுத்துள்ளார். கவிஞர் வைரமுத்து, சீமான் உள்ளிட்டோரும் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.
நாட்டு விடுதலைக்காக, சுதேசிக்கப்பல் விட்டு, வெள்ளையர்களுக்கு இழப்பை ஏற்படுத்தி, அதற்குப் பரிசாக இரட்டை ஆயுள் தண்டனையைப் பெற்று, கொடும் சிறைவாசத்தை அனுபவித்த தியாகசீலர் வ.உ.சி.யையும், நாட்டின் விடுதலைக்காக வெள்ளையர்களை எதிர்த்துச் சண்டையிட்டு, இழந்த நிலத்தை மீட்டெடுத்த பெருமாட்டி வேலுநாச்சியாரையும் புறக்கணிக்கும் மத்திய அரசின் முடிவு ஒட்டுமொத்தத் தமிழர்களையும் அவமதிப்பதாகும். தமிழர்கள் அதிர்ந்து போய் இருக்கிறார்கள்.
மத்திய அரசு அதன் முடிவை மாற்றிக் கொண்டு தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். விடுதலைக்காக போராடியவர்களின் உருவம் அடங்கிய அலங்கார ஊர்தி அணிவகுப்பில் இடம் பெறுவதே சிறப்புக்குரியதாகும்.
தமிழையும் தமிழ்நாட்டையும் எப்போதும் உயர்வாகப் பேசி வரும் பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் தலையிட்டு சரியான முடிவை அறிவிக்க வேண்டும்.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளை ஐக்கிய நாடுகள் அவையில் எடுத்துரைத்து, இதுதான் தன்னுடைய வாழ்நாளில் மகிழ்ச்சியான தருணம் என்று தமிழைப் போற்றிய பிரதமர் மோடி என்ன செய்யப்போகிறார்?
காலம் கடந்துவிடவில்லை. நல்ல தகவலுக்காக தமிழகம் காத்திருக்கிறது.



