fbpx
Homeதலையங்கம்கார்கில் வெற்றிக்கு வீர வணக்கம்!

கார்கில் வெற்றிக்கு வீர வணக்கம்!

கார்கில் போர் வெற்றி தினம் இன்று…
நடுங்கும் குளிரில் நாட்டின் எல்லைப்பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தினரை எதிர்த்து வீரத்தோடு போரிட்டு வெற்றியை நாட்டுக்கு பரிசளித்தனர் நம் நாட்டு ராணுவ வீரர்கள்.

அந்த வீரர்களை நினைவு கூறும் வகையிலும் உயிரோடு இருக்கும் கார்கில் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் 23வது ஆண்டாக கார்கில் வெற்றி தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த போர்களிலேயே 1999ஆம் ஆண்டில் நடைபெற்ற கார்கில் போர்தான் இன்று வரை மிகவும் தீவிரமான போர். கார்கில் யுத்தமானது 1999ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி தொடங்கி ஜூலை 26ஆம் தேதி வரை நடைபெற்றது.

பாகிஸ்தானின் ஊடுருவல், இதனை நமது வீரர்கள் கண்டறிந்தது, பின்னர் யுத்தம் நடத்தியது என கார்கில் போர் 3 கட்டங்களைக் கொண்டது.

இந்த போருக்கு ஆபரேசன் விஜய் என்று பெயரிடப்பட்டது. இந்திய படைக்கும், பாகிஸ்தான் படைக்கும் இடையில் நிகழ்ந்த போரில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களை துவம்சம் செய்து இந்தியா வென்றது.

கார்கில் யுத்த காலத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒட்டுமொத்த தேசமும் நமது ராணுவ வீரர்களின் பின்னால் அணிவகுத்து நின்றது.

இந்த போர் முழுவதும் கடுமையான பனி பொழிவு இருக்கும் பகுதியில் நடந்தது. இந்த பகுதி மிகவும் ஆபத்தான பகுதியாக இருந்ததால் அந்த சவாலையும் இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் சந்தித்து போரை எதிர்கொண்டனர்.

மலை சிகரங்களில் ஆபரேஷன் விஜய் வெற்றி பெற இந்திய விமானப்படை மிக முக்கியமாக உதவியது.

இந்திய விமானப்படை உதவியுடன், டைகர் மலை பகுதியை ஜூலை மாதம் இந்தியா கைப்பற்றியது. இதனை அடுத்து வரிசையாக இந்தியா அடுத்தடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்திருந்த பகுதிகளைக் கைப்பற்றியது.

பாகிஸ்தான் பிடித்து வைத்திருந்த டைகர் மலை, ரொலோலிங் மலை, பத்ரா டாப், ஸ்ரீநகர் லே தேசிய நெடுஞ்சாலை தொடங்கி எல்லா இடங்களையும் இந்தியா மொத்தமாக கைப்பற்றியது.

பாகிஸ்தான் ராணுவத்தை முழுமையாக விரட்டியடித்த பின்னர் ஜூலை 26ஆம் தேதி கார்கில் வெற்றி தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

கார்கில் யுத்தத்தில் நாம் 527 மாவீரர்களை இழந்து நம் நிலப்பகுதிகளை மீட்டெடுத்தோம். 1,363 ராணுவ வீரர்கள் இந்த யுத்தத்தில் படுகாயமடைந்தனர். பாகிஸ்தான் தரப்பில் 700 பேர் கொல்லப்பட்டனர்.

உயிரை துச்சமென மதித்து போரிட்டு உயிர்நீத்த இந்திய வீரர்கள் அனைவருக்கும் இந்நாளில் வீர வணக்கம் செலுத்துவோம்!

படிக்க வேண்டும்

spot_img