தமிழகம், கேரளம் உள்ளிட்ட தெற்கு ரயில்வே பகுதியில் புதிய வழித் தடத்திட்டத்திற்கு வெறும் ரூ.59 கோடி மட்டுமே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் வடக்கு ரயில்வேயின் புதிய வழித்தடத்திட்டத்திற்க்கு ரூ.14,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் தெற்கு ரயில்வே நிர்வாகமோ தமிழகத்துக்கு ஏராளமாக நிதி ஒதுக்கப்பட்டது போல செய்தி வெளியிட்டுள்ளது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகளுக்கு தெற்கு ரயில்வேக்கு ரூ.7ஆயிரத்து 114 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது,
இது கடந்த ஆண்டுகளை விட கூடுதல் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது. ஆனால் வடக்கு ரயில்வேக்கு ரூ.66 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதை மறைப்பது ஏனோ?
கடந்த நான்கு ஆண்டுகளில் புதிய வழித்தடத் திட்டத்திற்கான நிதிஒதுக்கீட்டுக் கணக்கைப் பார்த்தால் தெற்கு ரயில்வேயை விட வடக்கு ரயில்வேக்கு 101 மடங்கு அதிகம் உள்ளது. இந்த உண்மையை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
தண்டவாளங்கள் மேடுபள்ளம் இல்லாமல் சமமாக இருக்க வேண்டியது ரயிலுக்கு எவ்வளவு முக்கியமோ, அதைவிட அதிக முக்கியம் நிதி ஒதுக்கீட்டிலும் வடக்கிற்கும் தெற்கிற்கும் சம பங்கீடு இருக்க வேண்டும் என்பது என தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு எம்.பி சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த உண்மையை ஏற்றுக்கொண்டு தமிழகத்திற்கும், தெற்கு ரயில்வேக்கும் போதிய நிதி ஒதுக்கவும், புதிய வழித்தடத் திட்டங்களை விரைவுபடுத்தவும், தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒன்றிய ரயில்வே அமைச்சகத்தை வலியுறுத்தி கூடுதல் தொகை பெற வேண்டும். அது தான் நியாயம், தர்மம்.
ஒரு கண்ணில் வெண்ணையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கலாமா?



