2014ம் ஆண்டு முதல் இலங்கை, வெளிநாட்டுக் கடனில் மூழ்கத் தொடங்கியது. 2019ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 42% ஆக இருந்த வெளிநாட்டுக் கடன், 2021ல் 101% ஆக உயர்ந்து விட்டது. இதன் மூலம் கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது.
இதில் இருந்து மீள, இலங்கை கேட்டுக் கொண்டதன்பேரில், ரூ.18,090 கோடி கடனை இந்தியா வழங்குகிறது. எந்த தயக்கமும் இன்றி கடன் வழங்க முன்வந்திருப்பது இந்தியாவின் ராஜதந்திரமாகவேப் பார்க்கப்படுகிறது. அண்டை நாடான இலங்கையுடனான உறவை ஸ்திரமாக வைத்திருக்கவே இந்தியா விரும்புகிறது.
இச்சூழலில் தான் இலங்கைத் தமிழ் எம்.பி.க்கள் இந்திய பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்கள். இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத் தரும் அரசியல் சாசன 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் தர வேண்டும் என்பதே அக்கடிதத்தின் சாராம்சம்.
இந்த கோரிக்கை சரியான நேரத்தில் இந்தியாவின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 1987ம் ஆண்டு இந்தியாவுடன் செய்து கொண்ட அமைதி உடன்பாட்டைத் தொடர்ந்து. இலங்கை அரசியல் சட்டத்தில் செய்யப்பட்ட 13வது திருத்தத்தின்படி இலங்கைத் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரங்களை அந்நாட்டு அரசு வழங்கி இருக்க வேண்டும். 35 ஆண்டுகளாகியும் அது நடக்கவே இல்லை.
இந்திய பிரதமருக்கு தமிழ் எம்.பி.க்கள் கடிதம் எழுதியதையே ஜீரணித்துக் கொள்ள முடியாமல் கூக்குரல் எழுப்பும் இலங்கை அரசில் அங்கம் வகிப்பவர்கள், எப்படி அங்குள்ள தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரத்தை, சம உரிமையை வழங்க முன்வருவார்கள்? ஒப்பந்தமே இந்தியா – இலங்கை அரசுகளுக்கு இடையே தான் போடப்பட்டது.
அப்படியிருக்க மோடிக்கு கடிதம் எழுதுவதை விமர்சிப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்? இலங்கை அரசிடம் முறையிட்டால் உடனே செய்து விடுவார்களா?
அந்த ஒப்பந்தப்படி, அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டிய பெரும் பொறுப்பு இந்திய அரசுக்கு உண்டு. இந்தக் கடமையை செய்து முடிக்க வேண்டும் என்பதே இலங்கைத் தமிழ் எம்.பிக்களின் கோரிக்கை. அதற்காக இந்திய பிரதமரை அவர்கள் அணுகியதும் சட்டப்படி சரியானதே. அந்த நம்பிக்கைக்கு இந்தியா துரோகம் செய்துவிடக் கூடாது. அந்தக் கடமையில் இருந்து இந்தியா விலகி விடக்கூடாது.
அதற்கான ஓர் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க இலங்கைக்கு முதல்கட்டமாக ரூ.18.090 கோடி கடனை அறிவித்துள்ள இந்தியா, அதற்கு ஓர் நிபந்தனை விதிக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமையை வழங்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. அதனை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவையும் இலங்கை அரசுக்கு நிர்ணயிக்க வேண்டும்.
இந்த கோரிக்கை நிறைவேறினால் தான், இந்திய அரசின் கடமை, வாக்குறுதி நிறைவேறியதாக அர்த்தம். இந்த பிரச்சினையில் இனியும் இலங்கை துரோகம் செய்வதை இந்தியா அனுமதிக்கக் கூடாது. வாய்ப்பு கிடைக்கும்போது அதனைப் பயன்படுத்திக் கொள்வது தான் புத்திசாலித்தனம்.
அதைத் தான் இலங்கைத் தமிழர்கள், இந்திய தமிழர்கள் மட்டுமல்ல உலகத் தமிழர்களும் எதிர்பார்க்கிறார்கள்.
இலங்கைக்கு அழுத்தம் தருமா, இந்திய அரசு?



