நடிகர் ரஜினி அரசியலில் இறங்கப் போவதாக அறிவிப்பதும் பின்னர் பல்டி அடிப்பதும் அவ்வப்போது நடக்கும் ஒன்று தான்.
அவர் 2017ம் ஆண்டு டிசம்பர் 31 அன்று, தனிக்கட்சி தொடங்கி அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்தார். பின்னர் வழக்கம் போல ரசிகர்களை ஏமாற்றும் வகையில் பின்வாங்கினார்.
தற்போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ரஜினிகாந்த் நேற்று திடீரென சந்தித்து அரை மணி நேரம் உரையாடி இருக்கிறார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் அரசியல் பற்றி இருவரும் விவாதித்ததாகவும் ஆனால் அரசியலில் இறங்கப் போவதில்லை என்றும் தெரிவித்து இருக்கிறார்.
ஆனால், அரசியல் விமர்சகர்கள் இவர்கள் இருவரின் சந்திப்பை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதுகின்றனர். ஏனென்றால் இது பாஜகவின் ஓர் ராஜதந்திரமாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் பாஜக, ரஜினியை எப்படியாவது தங்கள் பக்கம் இழுத்து விடவேண்டும் என கடந்த காலங்களில் மேற்கொண்ட முயற்சிகளை நாமறிவோம்.
தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவியுடனான சந்திப்பு, ரஜினியை மீண்டும் இழுக்கும் முயற்சியா? என்ற கேள்வியை முன்னிறுத்துகிறது. சமீபத்தில் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருதை ஒன்றிய அரசு வழங்கி கவுரவித்திருந்தது. இந்த சூழலில் தான் இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் கொண்டதாக கணிக்கப்படுகிறது.
ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல. ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதியாக செயல்படவும் கூடாது.
அப்படி இருக்கையில், ஊடகங்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கான அரசியலை பேச வேண்டிய அவசியம் ஆளுநருக்கு எதனால் வந்தது? இதன் மூலம் அரசியல் சட்ட விதிக்கு விரோதமான முறையில், ஆளுநர் அலுவலகம் ஒரு அரசியல் கூடமாக மாற்றப்பட்டுள்ளது என்பது தானே உண்மை.
இது ஒருபுறமிருக்க, ரஜினியை முன்னிறுத்தி பாஜக தலைமையில் சிதறுண்ட அதிமுக குழுக்களை சேர்த்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக திட்டமிடுகிறதா?
பாஜக தன்னை நிலைநிறுத்த இதுபோன்று அரசில் சதுரங்கத்தில் காய் நகர்த்துவது ஒன்றும் புதிதல்ல. பாஜக ஆளுங்கட்சியாக இல்லாத மாநிலங்களில் எல்லாம் இந்த சூதாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. வெற்றியை ருசித்தும் பார்க்கிறது.
ஆனால், தமிழக அரசியலுக்கு ரஜினியை பாஜகவால் இழுக்க முடியுமா? என்பது பெரிய கேள்வியாக நம் கண்முன் தெரிகிறது. அதனை ஆச்சரியக் குறியாக மாற்ற பாஜக முனைவதில் தவறில்லை. ஆனால் மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கும் கதையாக ஆகி விடக் கூடாது அல்லவா?
ரஜினி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்துவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்!



