fbpx
Homeதலையங்கம்தமிழ்வழியில் மருத்துவம் பயில தயாராகுங்கள்!

தமிழ்வழியில் மருத்துவம் பயில தயாராகுங்கள்!

கடந்த அக்டோபர் 16ம் தேதி இந்தியாவில் முதல் முறையாக மத்திய பிரதேசத்தில் இந்தியில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.

அப்போது இந்தியில் மொழி பெயர்க்கப்பட்ட மருத்துவப் படிப்பிற்கான முதலாம் ஆண்டு புத்தகங்களையும் அமித் ஷா வெளியிட்டார்.

மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்திலும் மருத்துவப் படிப்பை இந்தியில் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தராகண்ட் மாநிலத்தில் அடுத்த ஆண்டு முதல் இந்தியில் மருத்துவக் கல்வி பயிற்றுவிக்கப்படும் என அம்மாநில கல்வி அமைச்சர் தன்சிங் ராவத் அறிவித்துள்ளார்.

அதேபோல, சென்னையில் விரைவில் தமிழில் மருத்துவம் (எம்பிபிஎஸ்) பயில நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசும் அறிவித்துள்ளது.

மருத்துவக் கல்லூரியின் பாடப்புத்தகங்கள் தமிழ்வழியில் இருக்க வேண்டும் என்பதற்காக மொழி பெயர்க்கும் பணியை தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

ஆங்கில மருத்துவத்துறை புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணியில் மூன்று மருத்துவப் பேராசிரியர்கள் கடந்த ஓராண்டாக ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், எம்பிபிஎஸ் என்பது அடிப்படை பட்டப் படிப்பு அல்ல. உயிருக்கு ஆபத்தான சூழலில் மருத்துவர்கள் அனைத்தையும் பயன்படுத்த கற்க வேண்டும். உலக சுகாதார அமைப்பு, யுனிசெப் போன்றவற்றின் மருத்துவ பத்திரிகைகள், வழிமுறைகள், ஒழுங்குமுறைகளை மருத்துவர்கள் பின்பற்ற வேண்டும்.

அவற்றின் அனைத்து வெளியீடுகளும் ஆங்கிலத்தில் தான் உள்ளன. இந்தியிலோ தமிழிலோ மருத்துவம் படித்தால் அவர்கள் இந்தியாவுக்கு வெளியே போய் மேற்படிப்பு படிக்கவோ, ஆராய்ச்சியோ நடத்த முடியுமா? என்ற சந்தேகம் கிளப்பப்பட்டுள்ளது.

மாணவர்கள் வெறும் எம்பிபி.எஸ் படிப்புடன் படிப்பை நிறுத்த மாட்டார்கள். அதை முடித்த பின்னர் உயர் படிப்பு படிப்பார்கள். அவர்களுக்கு முதுநிலை படிப்புகள், மாநில மொழிகளில் வர வேண்டிய தேவை ஏற்படும்.

இதனால் இந்தி, தமிழ் மற்றும் இதர மொழிகளில் மருத்துவம் கற்பது சரியாக இருக்குமா? என்ற விவாதம் எழுந்துள்ளது. இந்த கருத்துகளை யாரும் புறந்தள்ளிவிட முடியாது.

எனவே தமிழ் மொழியில் மருத்துவம் கற்பிக்கும்போது மிகுந்த கவனம் தேவை. ஆங்கில வழியில் மருத்துவம் படிப்பவர்களுக்கு இணையாக தமிழ்வழியில் படிப்பவர்களால் மருத்துவ அறிவை பெற முடியுமா? தேர்வில் வெற்றி பெற முடியுமா? எந்த மொழி வழியாகப் படித்தாலும் அவர்களின் மருத்துவ அறிவு சமநிலையில் இருக்க வேண்டியது மிகமிக அவசியம். இதற்கேற்ப தரமான மருத்துவ புத்தகங்கள் தமிழில் உருவாக்கப்பட வேண்டும்.

இதனையெல்லாம் அலசி ஆராய்ந்த பின்னரே தமிழக அரசு களமிறங்கி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தமிழ்வழியில் படித்து மருத்துவராக வேண்டும் என்ற தமிழக மாணவ, மாணவிகளின் கனவு நனவாகும் காலம் வெகுதொலைவில் இல்லை!

படிக்க வேண்டும்

spot_img