fbpx
Homeதலையங்கம்ஹால்மார்க் முத்திரை திட்டம் விரிவாக்கம்

ஹால்மார்க் முத்திரை திட்டம் விரிவாக்கம்

தங்கத்தின் தூய்மை மற்றும் நேர்த்திக்கான சான்றளிக்கும் செயல்முறையே ஹால்மார்க் என்று அழைக்கப்படுகிறது.

மற்றவற்றில் முதலீடு செய்வதை விட தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்று நினைக்கும் மக்கள் கையில் இருக்கும் பணத்துக்கு தங்க நகைகளை வாங்குவதில் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆனால் தாங்கள் வாங்க கூடிய தங்கம் எந்த அளவிற்கு தூய்மையானது என்ற கவலை பெரும்பாலானோர் மனதில் உள்ளது. ஆனால் பி.ஐ.எஸ் எனப்படும் தரக்கட்டுப்பாடு அமைப்பு சோதனை செய்து முத்திரையிடப்பட்ட ஹால்மார்க் தங்கம் விற்பனையில் இருப்பதால் தங்கத்தில் முதலீடு செய்வோர் மற்றும் நகைகளை வாங்குவோர் அதிக நம்பிக்கையுடன் உள்ளனர்.

தங்க நாணயங்கள் மற்றும் நகைகள் வடிவில் நீங்கள் தங்கத்தை வாங்கும் போது ஏமாற்றப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த, ஹால்மார்க் செய்யப்பட்ட தங்கத்தை வாங்கவே பரிந்துரைக்கப்படுகிறது.

இது தங்கத்தின் தூய்மையை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் விற்பனை செய்தால் சிறந்த ரீ சேல் வால்யூவையும் பெற உதவுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு, மக்கள் ஏமாறாமல் இருக்க ஏதுவாக தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையைக் கட்டாயமாக்கும் திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

14, 18, 22 காரட் தங்க நகை என தரத்தை நிர்ணயம் செய்யும் வகையில் ஹால்மார்க் முத்திரை பொறிக்கும் கட்டாயத் திட்டம் நடப்பாண்டு (2021) ஜூன் 23-ம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது.

முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் 256 மாவட்டங்களில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

சோதனை அடிப்படையில் அறிமுகப் படுத்தப்பட்ட இந்தத் திட்டம் சுமுகமாக நடைமுறைப்பட்டதை அடுத்து இதனை நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக நுகர்வோர் அமைச்சகம் தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.

தற்போதைய நிலவரப்படி, 1.27 லட்சம் நகைக் கடைகள் ஹால்மார்க் ஆபரணங்களை விற்பனை செய்வதற்காக இந்திய தர நிர்ணய அமைப்பிடம் (பிஐஎஸ்) பதிவு செய்து கொண்டுள்ளன.

இந்தியாவில் மக்கள் அதிக நம்பிக்கையுடன் முதலீடு செய்வது தங்கத்தின் மீது தான். தரமான தங்கத்தை அவர்கள் வாங்க வேண்டும் என்ற அக்கறையுடன் செயல்படுத்தும் இந்த திட்டத்திற்கு பொதுமக்களிடம் குறிப்பாக முதலீட்டாளர்களிடம் நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளது.

குண்டுமணி தங்கம் வாங்கினால் கூட, அது ஹால்மார்க் தானா என்பதை உறுதி செய்து வாங்குவோம். நாடு முழுவதும் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதும் அவசியமாகும்!

படிக்க வேண்டும்

spot_img