மனித உடலை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்தால்கூட தட்டுப்படாத உறுப்பான மனதுக்கு மனிதகுலம் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?
மனம் தான் நம்மை பாதுகாக்கும்; பக்குவப்படுத்தும்.
“இன்றைய நிலையில், நான் ஒரு பூஜ்ஜியம் டாக்டர். பூஜ்ஜியம் என்றால் என்னவென்று தெரியுமா? எப்போதாவது நீங்கள் அந்த மனநிலையில் இருந்தது உண்டா டாக்டர்? வெறுமை டாக்டர். என்னைச் சுற்றி எதுவும் இல்லை. எனக்கென்று யாரும் இல்லை டாக்டர்.
இத்தனை வருடங்கள் எனது படிப்பு, உழைப்பு அத்தனையையும் இழந்துவிட்டேன். இழப்பின் வலி உங்களுக்குப் புரியாது. அது எனக்கு மட்டுமே புரியும். ஏனென்றால், நான் இந்த வாழ்வில் மீட்ட அத்தனையையும் இழந்திருக்கிறேன்.”
அந்த இளைஞன் நம்பிக்கைகள் ஏதுமற்ற ஒரு ஆழ்ந்த விரக்தியில் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.
ஒரு இழப்பிற்குப் பிறகு, ஒரு தோல்விக்குப் பிறகு, ஒரு துரோகத்திற்குப் பிறகு மீண்டெழுவது அத்தனை சுலபமான காரியம் அல்ல.
ஆனால் -இழப்பும், தோல்வியும், துரோகமும் நமது அன்றாட வாழ்க்கையில் பின்னிப் பிணைந்தது. எந்த ஒரு கண நேரத்திலும் நமக்கான இழப்போ, பிரிவோ, தோல்வியோ நமக்காகக் காத்துக் கொண்டே இருக்கிறது.
அதனால் மீண்டெழுவது அவசியமாகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு நாம் வேகமாக மீண்டு வருகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நாம் பக்குவப்பட்டிருக்கிறோம் என்று பொருள். இழப்புகளையோ, தோல்விகளையோ நாம் தவிர்க்க முடியாது.ஆனால், ஒவ்வொரு இழப்புகளில் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
மனிதன் என்பவன் இந்த இயற்கையின் ஒரு அங்கம். ஆம், நாம் இயற்கையோடு இயற்கையாகக் கலந்து இருக்கிறோம். அதனால் நம்மைத் தவிர, இந்த இயற்கையைத் தவிர இந்த வாழ்க்கையில் அத்தனையும் தற்காலிகமே.
ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையை நம்மைச் சுற்றிக் கட்டமைத்துக் கொள்வதுதான் எந்த ஒரு பேரிழப்பில் இருந்தும் நாம் மீண்டு வருவதற்கான முதல்படி.
ஒரு சக மனிதனின் தோழமையும், ஆறுதலான நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளும், அவர்களின் அருகாமையும்தான் நம்மை மிக விரைவாக வெளிக்கொண்டுவரும்.நமது காயங்களையும் வலிகளையும் மட்டுப்படுத்தும், சமன்படுத்தும் வலிமை சக மனிதனின் சொற்களுக்குத்தான் உண்டு. அன்பான வார்த்தைகள் அருமருந்து.
அதனால் நாம் இழப்பின் வலி நிறைந்த தருணங்களில், முடிந்தவரை தனிமையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். நாம் அத்தனையும் இழந்திருக்கலாம். ஆனால், நாம் இழக்காத சில மனிதர்கள் நம்முடன் இருப்பார்கள். அவர்கள்தான் நம்மை இந்த இக்கட்டான நிலையில் இருந்து மீட்டுக்கொண்டு வருவார்கள். அவர்களின் கனிவான சொற்களும், அளவற்ற கருணையும் நமக்கு நிச்சயம் தேவைப்படும்.
மீண்டு வருதல் என்பது நிச்சயமாக ஒரு தனி மனிதனின் பயணம்தான். அதற்கான ஆறுதலையும், நம்பிக்கையையும் மட்டுமே சகமனிதர்களும், இந்தச் சமூகமும் செய்யும். மீண்டு வருவது என்பது அந்தத் தனி மனிதனைப் பொறுத்ததுதான்.
முடிந்தவரை தன்னைச் சகமனிதர்களுடன் இணைத்துக் கொள்வது, உணர்ச்சிகளின் கொந்தளிப்பில், இழப்பின் விரக்தியில் தோன்றும் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது, நடந்த தவறுகளை அறிவுப்பூர்வமாக அலசுவது, போக வேண்டிய பாதையைத் தேர்ந்தெடுப்பது, குறைந்தபட்ச இலக்கை நிர்ணயிப்பது என அந்த தனி மனிதன் செய்வதற்கு எவ்வளவோ இருக்கின்றன.
நமது வாழ்க்கை எந்த ஒரு கசப்பும் இல்லாமல், எந்த ஒரு சிக்கலான தருணங்களும் இல்லாமல் இருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. ஆனால் கடினமான, சிக்கலான தருணங்களை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும்,அதில் இருந்து நாம் பாதிக்கப்படாமல் எப்படி வெளியே வர வேண்டும் என்ற படிப்பினைகளை நாம் கற்றுக்கொண்டே ஆக வேண்டும்.
நமது வாழ்க்கை என்பது ஒரு தெளிந்த நீரோடையைப் போன்றது. நீரோடை எப்போதும் ஒரே சமநிலையிலே பயணிப்பதில்லை. வளைவுகள், மேடுகள், பள்ளங்கள், பாறைகள் என வெவ்வேறு தளங்களைக் கடந்துதான் பயணிக்கிறது.
அதே போலத்தான் நமது வாழ்க்கையும். எப்போதும் சிக்கல்களே இல்லாமல் அமைதியாக, நமக்கு ஏதுவாகச் செல்லும் என எதிர்பார்க்க முடியாது. வாழ்க்கை நமக்கு பல ஆச்சரியங்களை ஒவ்வொரு கணத்திலும் ஒளித்து வைத்திருக்கிறது.
சாதகமாகவும், பாதகமாகவும் பல நிகழ்வுகள் நமக்காக ஒவ்வொரு கணத்திலும் காத்திருக்கின்றன. அவை அத்தனையையும் நாம் எதிர்கொள்ள வேண்டும். அதில் ஏற்படும் இழப்புகளும், வலிகளும் நிச்சயமாகத் தற்காலிகமானவை தான்.
இந்த தற்காலிக மாற்றங்களில் நாம் நம்மை இழந்துவிடக் கூடாது. நம்பிக்கையுடன் காத்திருக்க வேண்டும். மனம் இந்த இழப்புகளில் இருந்து நம்மை நிச்சயமாக மீட்டுக் கொண்டுவரும். ஏனென்றால், மனம் நம்மை எப்போதும் கைவிடுவதில்லை.

கட்டுரையாளர்:
பேராசிரியர் டாக்டர் ஜி.ராஜமோகன்.
சைக்கோதெரபிஸ்ட், சென்னை,
9087007908.



