தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் நடத்தும் பேச்சுவார்த்தை முடிவடையும் நிலையில் இருக்கிறது.
இதில், பாஜக ஒட்டுமொத்தமாக 25 சதவீத இடங்கள் வரை எதிர்பார்த்ததாகவும், ஆனால், பாஜகவுக்கு 4 முதல் 5 சதவீத இடங்களை மட்டுமே அதிமுக ஒதுக்க முன்வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இழுபறி நீடித்த நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை முறிந்து விட்டது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று பாஜக தமிழக தலைமை முடிவு எடுத்துள்ளது. தமிழக பாஜகவின் முடிவை தேசிய தலைமையும் ஏற்றுக் கொண்டுள்ளது. அதிமுக உடனான தேசிய ஜனநாயக கூட்டணி தொடரும். அதிமுக உடனான நல்லுறவு வரும் காலங்களிலும் தொடரும்” என்கிறார்.
எடப்பாடி பழனிசாமியும் எதிர்காலத்தில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்கிறார். இருதரப்பினரும் பூசி மெழுகி இருக்கிறார்கள். அதிமுக & பாஜக உறவில் இது ஒரு விரிசல் என்ற உண்மை பொய்யாகி விடாது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இது ஒரு திருப்பமாகவே பார்க்கப்படுகிறது.
இந்து அமைப்புகளைப் பின்புலமாகக் கொண்டுள்ள பாஜகவுக்கு ஒருசில நகரப்பகுதிகளில் ஓட்டுகள் அதிகம் கிடைக்கும் நிலை உள்ளது. ஆனால் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரோ, பாஜக இல்லாததால் எங்களுக்கு எந்தப்பாதிப்பும் இல்லை என்று ஓங்கி அடிக்கிறார்.
அதிமுக – பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் அலசப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலைத் தாண்டியும், இவ்விரு கட்சிகளின் லாப நஷ்ட கணக்கை கூட்டிக்கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கொஞ்சமாக இருந்தாலும் ஓட்டுகள் பிரியும் போது இருவருக்கும் நஷ்டம் தானே. இது இவர்களுடன் மோதும் எதிரிக்கட்சிக்கு கிடைக்கும் லாபத்தை கூட்டத்தானே செய்யும்.
உள்ளாட்சித் தேர்தலில் சில நூறு வாக்குகள் கூட வெற்றி தோல்வியை நிர்ணயித்து விடும் அல்லவா?
தேர்தல் முடிவுகள் வரட்டும்; அதுவரை காத்திருப்போம்.



