முகமது நபிக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய தற்காக இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அவரால் தான் நாடு முழுவதும் துரதிர்ஷ்டவசமான சம்பவங்களுக்கு வழிவகுத்தது என்றும், இது மக்களின் உணர்வுகளைத் தூண்டியது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது. ஒட்டுமொத்த நாடும் பற்றி எரிவதற்கு நுபுர் ஷர்மா தான் காரணம்.
தனது செயல்பாட்டிற்காக ஒட்டுமொத்த நாட்டு மக்களிடம் நுபுர் ஷர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
நுபுர் ஷர்மாவிற்கு எதிராக பல எப்ஐஆர்கள் இருந்தபோதிலும் அவரை ஏன் டெல்லி காவல்துறை கைது செய்யவில்லை? என சரமாரியாக உச்ச நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியதை அடுத்து, எதிர்க்கட்சிகள் மத்திய பாஜக அரசை குறிவைத்து வருகின்றன.
அந்த வரிசையில் நுபுர் சர்மா மட்டுமின்றி பிரதமர் மோடியும் பொறுப்பேற்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வலியுறுத்தி இருக்கிறார். ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி, நூபுர் ஷர்மாவை பாஜக காப்பாற்றி வருகிறது என விமர்சித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் கண்டிக்கும் வரை இந்த பிரச்சினையை ஊறப்போட்டு இருப்பது சரியல்ல, ஒட்டுமொத்த நாட்டையும் பாதிக்கும் ஒரு செயலைச் செய்து விட்டு மன்னிப்பு கேட்க மறுப்பது மாண்பல்ல என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்து. கட்சியை விட்டு நுபுர் ஷர்மாவை நீக்கியதோடு தங்கள் பிரச்சினை முடிந்து போனதாக பாஜக கருதக் கூடாது.
இதுபோன்ற சூழ்நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே நாட்டு மக்கள் விரும்புகிறார்கள்.
இனியும் சாக்குப்போக்கு சொல்லாமல் நுபுர் ஷர்மா, உச்சநீதிமன்ற அறிவுரைப்படி தொலைக் காட்சியில் தோன்றி நாட்டு மக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.
மன்னிப்பு கேட்பதில் என்ன குறைந்து விடப்போகிறது? நாட்டுக்காக… நாட்டின் ஒற்றுமைக்காக இதனை உடனடியாக நுபுர் ஷர்மா செய்ய வேண்டும்.
கொழுந்து விட்டு எரியும் இந்த பிரச்சினையை, இனியும் காலம் தாழ்த்தி ஊதிப் பெருக்க வேண்டாம்.
மன்னிப்பு கேளுங்கள்!



