போலீசாருக்கு வார விடுமுறை அளிப்பதுடன் திருமணம், பிறந்தநாளிலும் விடுமுறை வழங்க வேண்டும் என போலீசார் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளது போலீசார் மத்தியில் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,
போலீசார் தங்கள் உடல் நலனை பேணி காக்க ஏதுவாகவும், அவர்கள் தங்கள் குடும்பத்தாருடன் போதிய நேரத்தை செலவிடுவதற்கும் வார விடுமுறை கட்டாயம் அளிக்க வேண்டும்.
வார ஓய்வு தேவைப்படவில்லை என தெரிவிக்கும் போலீசாருக்கும் ஓய்வு தினத்தில் பணியில் இருக்கும் போலீசாருக்கும் மிகை நேர ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
போலீசாரின் பிறந்தநாள், திருமண நாட்களில் அவர்களின் குடும்பத்தாருடன் கொண்டாடி மகிழ அந்த இரு நாட்களிலும் விடுமுறை வழங்க வேண்டும்.
தமிழக காவல் துறையின் சார்பில் போலீசாரின் பிறந்தநாள் மற்றும் திருமண நாள் வாழ்த்து செய்தி மாவட்டம் மற்றும் மாநகர கட்டுப்பாட்டு அறையில் இருந்து வாக்கி டாக்கி வாயிலாக சம்பந்தப்பட்ட போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும்.
இந்த அறிவுரைகளை அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட எஸ்பிக்கள் தவறாமல் செயல்படுத்த வேண்டும்.



