fbpx
Homeதலையங்கம்நீட் விவகாரத்தில் அதிமுக சறுக்கல்!

நீட் விவகாரத்தில் அதிமுக சறுக்கல்!

நீட்தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரிய சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியதுதான் தாமதம், உடனே முதல்வர் ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, அதில் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டுவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது.

சிறப்பு சட்டமன்ற கூட்டத் தேதியையும் சபாநாயகர் அறிவித்துவிட்டார்.
முதல்வர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தை பாஜக புறக்கணித்ததில் வியப்பேதும் இருக்க முடியாது.

ஆனால், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என்று ஓபிஎஸ், இபிஎஸ் ஆண்டுக்கணக்கில் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு வருகிறார்கள். இந்தநிலையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணித்தது நியாயமா?

அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான சட்டமன்ற கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றிய மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் கிட்டதட்ட ஐந்து மாதங்கள் கழித்து ஆளுநர் திருப்பி அனுப்பிய பிறகு நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பொறுப்பான எதிர்க்கட்சி என்ற முறையில் அதிமுக அவசியம் பங்கேற்று இருந்தி ருக்க வேண்டும்.

நீட் விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஒத்துழைப்பு தரும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து இருக்கிறார். ஆனால் கூட்டத்தை அதிமுக புறக்கணித்து இருக்கிறது.

ஆளுநரை அல்லது பாஜகவைத் திருப்திப்படுத்துவதற்காக புறக்கணித்தார்களா? இது என்ன கொள்கை? முரண்பட்டு நிற்கிறது அதிமுக. பாஜக அழுத்தம் இருந்திருக்குமோ? நீட் தேர்வு தொடர்பாக அ.தி.மு.கவின் செயல்பாட்டை எப்படிப் புரிந்து கொள்வது எனத் தெரியவில்லை.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. ஆட்சியில் மசோதா நிறைவேற்றப்பட்டு – அந்த மசோதா நிராகரிக்கப்பட்டதா அல்லது ஏற்கப்பட்டதா என்பதே கூட தெரியாமல் 27 மாதங்கள் மூட்டையில் கட்டி வைத்திருந்தது பா.ஜ.க அரசு.

ஒரு மசோதா குடியரசுத் தலைவரால் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தையே மூடி மறைத்தது யார்-? அ.தி.மு.க அரசு தானே. இப்படித்தான் அரசியல் விமர்சகர்கள் கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்து விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நீட் தேர்வு விலக்கக் கோரும் மசோதாவை மீண் டும் நிறைவேற்ற தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் பிப்ரவரி 8 (நாளை) நடைபெற உள்ளது.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்காததால் ஏற்பட்ட சறுக்கலை சிறப்பு பேரவைக் கூட்டத்தில் பங்கேற்று, நீட் விலக்கு மசோதாவை அதிமுக ஆத ரித்து ஈடுகட்டுமா?. அல்லது ஆளுநரை இன்னும் திருப்திப்படுத்தும் செயலைத் தொடரப்போகிறதா?

பொறுத்திருந்து பார்ப்போம்!

படிக்க வேண்டும்

spot_img