fbpx
Homeதலையங்கம்தாய்மார்களின் வேதனைக்குரல்!

தாய்மார்களின் வேதனைக்குரல்!

வீட்டுப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு 2 மாதமாக உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் அதன் விலை ரூ.965.50 ஆக இருந்தது. அதன்பிறகு மே மாதத்தில் வீட்டுப் பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையை 50 ரூபாய் உயர்த்தியது ஒன்றிய அரசு.

இதன் காரணமாக, இந்திய வரலாற்றில் முதன்முறையாக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.1,000க்கு மேல் உயர்த்தி, சாதனை படைத்த முதல் பிரதமர் மோடி என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

இந்நிலையில் ஒருமாதம் கழித்து தற்போது மீண்டும் சிலிண்டரின் விலையை 50 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. இதன் மூலம் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் ரூ.1068.50க்கு விற்பனையாகிறது.

கடந்த 17 மாதங்களில் சிலிண்டர் ஒன்றுக்கு 315 ரூபாயும், 2022-ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் மட்டும் 150 ரூபாயும் சிலிண்டர் விலையை மோடி அரசு உயர்த்தியுள்ளது.

காஸ் விலை உயர்வுக்கு என்ன காரணம்? வரி விதிப்பா? இல்லவே இல்லை. அதன் மீது விதிக்கப்படும் மொத்த வரி 5%தான் (ஒன்றிய அரசு வரி 2.5%, மாநில அரசு வரி 2.5%). விலை உயர்வுக்கு உண்மையான காரணம் ஒன்றிய பா.ஜ.க அரசு சிலிண்டர் மானியத்தை நீக்கியதே.

2014 ஜனவரியில் காஸ் சிலிண்டர் விலை 1100 ரூபாயை கடந்த போது அப்போதைய காங்கிரஸ் அரசு சிலிண்டருக்கு 750 ரூபாய் வரை மானியமாக மக்களுக்கு வழங்கியது. ஆகவே மக்களுக்கு காஸ் சிலிண்டர் 400 ரூபாய்க்கு கிடைத்தது. ஆனால் தற்போது பாஜக அரசு அந்த மானியத்தை நிறுத்தியதால் முழுச்சுமையும் மக்கள் தலை மீது விழுந்துவிட்டது.

இந்த விலை உயர்வை எங்களால் தாங்க முடியாது. போதிய வருவாய் இல்லாததால் குடும்பத்தை சமாளிக்க சிரமப்படுகிறோம். காஸ் மூலம் டீ, சுடுதண்ணீர் போடக் கூட யோசிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. மின் அடுப்புகளை பயன்படுத்தினால் மின் கட்டணம் ஏறும்.

இப்படியே போனால் விறகு அடுப்புக்கு மீண்டும் திரும்பும் நிலைக்கு தள்ளப்படுவோம். எனவே சிலிண்டர் விலையை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் -& இது தான் தாய்மார்களின் ஒருமித்த வேதனைக் குரல்.

ஒன்றிய அரசின் காதில் இந்த வேதனைக்குரல் விழுமா? விழுந்தாலும் வரும் மாதங்களில் காஸ் விலை மேலும் ஏறத்தான் செய்யும்; குறையப்போவது இல்லை.

இருந்தாலும் ஊதுற சங்கை ஊதி வைப்போம்!

படிக்க வேண்டும்

spot_img