தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் போது அவர்களை கைது செய்வதும், தாக்குவதும், விசைப்படகுகளை பறிமுதல் செய்வதும் மெகா தொடர் கதையாகி விட்டது. கடந்த சில மாதங்களாக கைது நடவடிக்கை குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் தொடங்கி உள்ளன.
இரு தினங்களுக்கு முன் ராமேஸ்வரம் மீனவர்கள் 55 பேரும் புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேரும் கைது செய்யப்பட்டதோடு, அவர்களின் 10 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
இது தமிழக மீனவர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்கச்சி மடத்தில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். புத்தாண்டு தினத்தன்று (ஜனவரி-1) ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 68 பேரையும் அவர்களது படகுகளையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார்.
இதனையடுத்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப் படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண இருநாட்டு பிரதமர்கள் பேசி இருக்கிறார்கள். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை சென்று பேசினார். 56 சுற்றுப் பேச்சுவார்த்தை நடக்கவிருப்பதாக, வைகோ கேட்ட கேள்விக்கு பாராளுமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் முரளிதரன் பதில் அளித்தார்.
இதுவரை பேச்சுவார்த்தையில் என்ன தீர்வு காணப்பட்டது? ஒன்றுமே இல்லை. இன்றைக்கு வரை தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நின்றபாடும் இல்லை; குறையவும் இல்லை.
குஜராத் மீனவர் ஒருவரை பாகிஸ்தான் கடற்படை ஒரு சமயம் தாக்கியது. என்ன நடந்தது? உடனே அந்நாட்டு தூதரை வரவழைத்து மத்திய அரசு கண்டித்தது. இந்த கடுமையை தமிழக மீனவர்கள் விஷயத்தில் காட்ட மத்திய அரசு ஏன் தயங்குகிறது? ஏன் இந்த மாற்றாந்தாய் மனப்போக்கு?
கைதான தமிழக மீனவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்களின் படகுகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும். ஓரிரு நாட்களில் இது நடக்க வேண்டும் என்பதே போராடும் மீனவர்களின் தற்போதைய கோரிக்கை.
இனியாவது தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு முனைப்பு காட்ட வேண்டும்.
தமிழக மீனவர்களை மத்திய அரசு பாதுகாக்கத் தவறுகிறதோ என்ற சந்தேகம் வந்து விடக்கூடாது அல்லவா? வலுவான கடற்படையைக் கொண்டுள்ள நமது நாட்டின் மீனவர்கள் அந்நிய நாட்டு கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்ந்து நடக்கலாமா?
நம் நாட்டு மீனவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டியது மத்திய அரசின் கடமை!



