மாநிலங்களின் கேடர்களாக அறியப்படும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை ஒன்றிய அரசுப் பணிக்கு மாற்ற வேண்டுமானால் சம்பந்தப்பட்ட மாநில அரசின் ஒப்புதல் அவசியம். மாநில அரசின் இந்த அதிகாரத்தில் தற்போது ஒன்றிய அரசு கை வைத்திருக்கிறது.
ஆம்; ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை ஒன்றிய அரசுப் பணிக்கு அழைக்கும் போது, மாநில அரசின் ஒப்புதலைப் பெற வேண்டியதில்லை என்கின்ற வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரத் திட்டமிட்டு இருக்கிறது, ஒன்றிய அரசு.
இதற்கு பாஜக ஆளாத மாநில முதல்வர்கள் தங்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒன்றிய அரசின் இந்த முடிவு, கூட்டாட்சித் தத்துவத்துக்கும் மாநில சுயாட்சிக்கும் எதிரானது என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில், ஒன்றிய அரசு தனது தன்னிலை விளக்கத்தில், கேட்கும் அதிகாரிகளை மாநில அரசுகள் தர மறுப்பதால் ஒன்றிய அரசின் செயல்பாடே பாதிக்கிறது; திட்டங்களை செயல்படுத்துவதில் முட்டுக்கட்டை ஏற்படுகிறது என தெரிவித்து இருக்கிறது.
இதே கருத்தைத் தான் மாநில அரசுகளும் எதிர்வினையாக முன் வைக்கின்றன. ஒன்றிய அரசுப் பணிக்கு கேட்கும் அதிகாரிகளை விடுவித்தால் மாநில அரசின் செயல்பாட்டில், திட்டங்களை அமல்படுத்துவதில் பாதிப்பு ஏற்படாதா? என்பது தான் மாநிலங்களின் கேள்வியாகவும் மாறி இருக்கிறது.
ஒன்றிய அரசுப் பணிக்கு கேட்டாலும் கூட, அதிகாரிகளை மாநில அரசு அனுப்ப மறுக்கலாம். இதற்கு பல முன்னுதாரணங்கள் உண்டு. தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் மாநில அதிகாரிகளை அனுப்ப மறுத்து போராடி இருக்கிறார்கள்.
அதிகாரிகளை பகிர்ந்து கொள்ளும் விஷயத்தில் கூட ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் கலந்து பேசி ஒரு முடிவை எட்ட முடியாதா? இதற்குத் தீர்வு காண ஒரு வழி கிடைக்காமலா போகும்? கூட்டாட்சி தத்துவம் சீர்குலையாத படி, ஆலோசித்து முடிவெடுப்பதை விட்டு விட்டு, மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்?
மாநில அரசுகளின் உரிமையைப் பறித்தாவது, தான் நினைப்பதை நிறைவேற்றியே தீருவோம் என்ற மனப்போக்கை ஒன்றிய அரசு தொடர்ந்து கையிலெடுத்தால் அது ஜனநாயக கட்டமைப்பையே சீர்குலைத்து விடும்.
ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்த விரும்பும் இந்திய ஆட்சிப்பணி விதி எண் 6 திருத்த மசோதா, வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்பட உள்ளதாம். கூட்டாட்சி தத்துவத்துக்கு குந்தகம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதே நாட்டு மக்களின் கவலை.
மாநில அரசுகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.
வேற்றுமையில் ஒற்றுமை என்பது தானே இந்தியாவின் ஸ்திரத்தன்மைக்கு அடையாளம்!



