Homeதலையங்கம்உயிரிழப்பை தவிர்க்க...!

உயிரிழப்பை தவிர்க்க…!

கொரோனா 2வது அலை நாடுமுழுவதும் அதி தீவிரம் அடைந்து வருகிறது. மே இரண்டாவது வாரத்தில் இதன் தாக்கம் அதிகரிக்கும் என்று கூறப்படுவதால் ஒவ்வொரு மாநிலமும் கட்டுப்பாடு விதிகளை அமல்படுத்தி வருகிறது.

கொரோனா பரவல் அதிகம் உள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார், டெல்லி, உ.பி, கேரளா மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

இதனால் அம்மாநில அரசுகள் முழு ஊரடங்கு அமல்படுத்தி தொற்று மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.
தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு அதை தடுக்கும் வகையில் முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்துவருகிறார்.

தொற்றுபரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் 2 வாரத்துக்கு
முழு ஊடரங்கை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளார்.

முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மளிகை சாமான்கள் வாங்கிக் கொள்ள வசதியாக காலை 6 மணி முதல் 12 மணிவரை கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து தங்களுக்கு தேவையான பொருட்களை விரைந்து வாங்கிக்கொண்டு வீடுகளுக்குச் செல்லவேண்டும். கூடியமட்டும் வாகனங்களை எடுத்துச்செல்வதை தவிர்த்து நடந்தே செல்வது நல்லது.

தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

மக்கள் முழு ஊரடங்குக்கு ஒத்துழைப்புக்கொடுத்து பொறுப்புடன் நடந்துகொண்டால் 2 வாரங்களுக்கு பிறகு ஊரடங்கு நீடிக்கவேண்டிய அவசியம் இருக்காது என்று தமிழக அரசும் தெரிவித்துள்ளது.

எனவே கொரோனாவை நமது மாநிலத்தில் இருந்து முற்றிலும் விரட்டி அடிக்க அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டிய கடமை மக்களுக்கு உள்ளது.

வீட்டை விட்டு அனாவசியமாக வாகனங்களை எடுத்துக்கொண்டு சாலைகளில் திரியக் கூடாது என்று இளைஞர்களுக்கு பெற்றோர்களே அறிவுறுத்த வேண்டும்.
கொரோனா தாக்கம் குறித்து விழிப்புணர்வை இளம்பெண்கள் முதியோர்களுக்கு ஏற்படுத்தவேண்டும்.

தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியத்தை எடுத்துக்கூற வேண்டும். முககவசம் தான் முதல் பாதுகாப்பு என்பதை புரிந்துகொண்டால் தொற்றையும் உயிரிழப்பையும் தவிர்க்க முடியும்.

படிக்க வேண்டும்

spot_img