fbpx
Homeதலையங்கம்உச்ச நீதிமன்றமே தீர்வு வழங்கட்டும்!

உச்ச நீதிமன்றமே தீர்வு வழங்கட்டும்!

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட கடந்த 5ம் தேதி பிரதமர் மோடி, விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாகச் சென்றார்.

பதிண்டா என்ற இடத்தில் மேம்பாலத்தில் போராட்டக்காரர்கள் சாலையை மறித்ததால் 20 நிமிடங்கள் பிரதமரின் வாகனம் ஸ்தம்பித்து நின்றுள்ளது.
நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு பிரதமர் திரும்பிச் சென்று விட்டார். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கியது.

முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை பஞ்சாப் காவல்துறை மேற்கொள்ளாததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

ஆனால், பிரதமரின் பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை என்றும், இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும் பஞ்சாப் அரசு கூறியுள்ளது.
இது, பாஜக – காங்கிரஸ் இடையே விவாத மோதலாக மாறியபோதிலும் பிரதமரின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயமாகும்.

இதில் சமரசத்துக்கே இடமில்லை.
மீண்டும் இதுபோல ஒரு நிகழ்வு நடந்து விடக்கூடாது என்பதால் உண்மை நிலை அறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே நாட்டு மக்களின் கவலை.

பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்ட குழுவை பஞ்சாப் அரசு அமைத்தது. ஒன்றிய அரசும் ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது.

இப்படி இருவேறு குழுக்கள் விசாரணை நடத்திய நிலையில் ஏற்பட்ட முரண்பாடுகள் ஒருபுறமிருக்க, இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு போனது. அங்கு விசாரணையின் போதும் ஒன்றிய அரசு, பஞ்சாப் மாநில அரசுக்கு இடையே முரண்பாடுகள் தெறித்தன.

எந்த விசாரணையுமின்றி மாநில அதிகாரிகள் கண்டிக்கப்பட்டதாக கூறி, ஒன்றிய அரசின் குழு விசாரணையில் மாநில அரசின் அதிகாரிகளுக்கு நியாயம் கிடைக்காது என பஞ்சாப் வாதிட்டது.

இதனைத்தொடர்ந்து ஒன்றிய அரசின் மற்றும் மாநில அரசின் விசாரணைக் குழுக்களுக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம், தாமே ஒரு விசாரணைக் குழுவை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைத்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் பிரதமர் பாதுகாப்பு குளறுபடியில் வெளிநாட்டு சதி இருக்க வாய்ப்பிருப்பதாக வேறு புதிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இப்படி… பிரதமரின் பாதுகாப்பே விவாதப்பொருளாக மாறி இருப்பது விரும்பத்தகாதது.

ஒன்றிய, மாநில அரசுகளின் குழுக்கள் தனித்தனியே விசாரணை நடத்தினால் மேலும் மேலும் முரண்பாடுகளே உருவாகும்; இரு அரசுகளிடையே மோதல் போக்கையே தோற்றுவிக்கும் என்பதால் இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தன் கையில் எடுத்திருப்பது அனைவருக்கும் ஏற்புடைய ஒன்றாகும்.

நல்ல தீர்வை உச்சநீதிமன்றமே வழங்கட்டும்!

படிக்க வேண்டும்

spot_img