fbpx
Homeதலையங்கம்இலங்கை கடற்கொள்ளையர் !

இலங்கை கடற்கொள்ளையர் !

இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதும் வலைகளைச் சேதப்படுத்தி பல லட்சம் ரூபாய் மதிப்பிலான விசைப்படகுகளை அபகரிப்பதும் சிறு கதை அல்ல, மெகா தொடராகவே நீள்கிறது.

போதாக்குறைக்கு இப்போது இலங்கை கடற்கொள்ளையர்களும் தங்கள் பங்குக்கு தமிழக மீனவர்கள் மீது தாக்குதலைத் தொடங்கி உள்ளனர். கடந்த 23ம் தேதி வேதாரண்யம் மீனவர்கள் 8 பேரை கடற்கொள்ளையர் தாக்கி உள்ளனர். மறுநாள் அதே பகுதி தமிழக மீனவர்கள் 3 பேரை தாக்கி வலை, மீன்கள், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட வற்றை பறித்துச் சென்றுள்ளனர். அதோடு மூன்று மீனவர்களை நடுக்கடலில் வீசிச் சென்றுள்ளனர். அந்த வழியாக வந்த பிற மீனவர்கள், காயங்களுடன் உயிருக்குப் போராடிய அவர்களைக் காப்பாற்றி கரை சேர்த்துள்ளனர்.

கும்பலாக வரும் கடற்கொள்ளையர்கள் வாள், கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கி உள்ளனர். கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கடற்கொள்ளையர் தாக்குதல் நடத்திய இடம் இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியாகும். அதாவது இந்திய கடல் பகுதியில் வெளிநாட்டு கொள்ளையர் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்.

மன்னராட்சி காலத்தில் கூட கடற்கொள்ளையர் இருந்துள்ளனர். அவர்களை தமிழ் மன்னர்கள் அடக்கி ஒடுக்கிய வரலாறு நமக்குத் தெரியும். தற்போது தமிழக மீனவர்கள் மீது ஒரே வாரத்தில் இருமுறை கடற்கொள்ளையர் தாக்குதல் நடத்தி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கடலுக்குச் செல்லும் மீனவர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி இருக்கிறது.

இந்திய மீனவர்கள் வெளிநாட்டினரால் தாக்கப் பட்டு இருப்பது அவமானம் தானே–? இது, இந்திய பாதுகாப்புத்துறையும் வெளியுறவுத் துறையும் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியத்துவம் கொண்டது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா? இந்திய கடற்படைக்கு ஏதேனும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதா? காலங்காலமாக இலங்கை கடற்படை யினரால் தாக்கப்பட்டு வரும் தமிழக மீனவர்கள், அந்நாட்டு கடற்கொள்ளையராலும் தாக்கப்பட வேண்டுமா? ஒன்றிய அரசு உடனடி யாக தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் இதுவும் தொடர் கதையாகி விடும். ஒன்றிய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் அனைத்துக் கட்சியினரும் அழுத்தம் கொடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

ஒன்றிய அரசின் கடைக்கண் பார்வையாவது தமிழக மீனவர்கள் மீது படுமா?.
விடியல் பிறக்கட்டும்.

படிக்க வேண்டும்

spot_img