தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவிவரும் சூழலில், ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில், துணை வேந்தர்கள் மாநாடு ஊட்டியில் தொடங்கிய அதே நாளில், துணைவேந்தர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாவை தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளது.
இதன் பின்னணி என்ன? தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா உள்பட பல்வேறு தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கால தாமதம் செய்து வருகிறார்.
தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் அளிக்கப்பட்ட தேநீர் விருந்தை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் புறக்கணிப்பதாக அறிவித்தன. மேலும், திமுக கூட்டணி கட்சியினர் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.
இந்த சூழலில்தான், டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 10வது துணைவேந்தராக உள்ள சுதா சேஷய்யன் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனையடுத்து, துணைவேந்தர் தேர்வுக்குழு தெரிவு செய்து அனுப்பிய பரிந்துரைகளைத் தவிர்த்து, ஆளுநர் ஆர்.என்.ரவி, ஏற்கனவே துணைவேந்தராக இருந்த சுதா சேஷய்யனின் பதவிக்காலத்தை டிசம்பர் வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார்.
அப்போதே, துணை வேந்தர்கள் நியமனம் செய்வதில் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே பெரிய விரிசல் ஏற்பட்டுவிட்டது.
ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில், துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கிய அதே நாளில், தமிழக அரசின் 13 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாவை தமிழக அரசு சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றியுள்ளது.
இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் பாஜக எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்த சட்டத் திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தபின், 13 மாநிலப் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கும்.
இந்த மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி இருப்பது தமிழக அரசு & ஆளுநர் மோதலின் அடுத்த உச்சக் கட்டமாக பார்க்கப்படுகிறது.
எனினும் இரு தரப்புகள் இடையே மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு எந்த இடையூறும் யாராலும் இருக்கக்கூடாது என்பதே மக்களின் ஆசை; எதிர்பார்ப்பு!



