fbpx
Homeதலையங்கம்ஆபத்தான கடன் வழங்கும் செயலிகள்!

ஆபத்தான கடன் வழங்கும் செயலிகள்!

வங்கி சாரா நிதி நிறுவனங்கள், செயலி வாயிலாக கடன் வழங்கும் நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது, கிட்டத்தட்ட 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள், ரிசர்வ் வங்கிக்கு வந்துள்ளன.

கடந்த 2021 ஏப்ரல் முதல் 2022 மார்ச் வரையிலான காலத்தில், கடன் வழங்கும் செயலிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் போன்றவற்றின் மீது 7,813 புகார்களை ரிசர்வ் வங்கி பெற்றுஉள்ளது.

இதையடுத்து, நிதிதொழில்நுட்ப நிறுவனங்கள் குறித்த விதிமுறைகளை, விரைவில் ரிசர்வ் வங்கி அறிவிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அண்மைக் காலமாக, செயலி வாயிலாக வெகு விரைவாக கடன் வழங்குவது அதிகரித்து வரும் நிலையில், கடனை வசூலிப்பதில், இந்நிறுவனங்கள் நடந்துகொள்ளும் முறை குறித்த புகார்களும் அதிகரித்து வருகின்றன.

கடன் வசூலிப்பவர்களின் தவறான வார்த்தை பிரயோகங்கள், அகால நேர அழைப்புகள் என பலவிதங்களில் கடன் வாங்கியவர்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.

அதோடு நிற்காமல் கடன் வாங்கியவர் படத்தை இன்னொரு பெண்ணுடன் ஆபாசமாக சித்தரித்து உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி தொல்லை தருவதை உச்சக்கட்டமாக கையாள்கின்றனர். இதனால் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதையடுத்து, ரிசர்வ் வங்கி இவ்விவகாரங்கள் குறித்து ஆராய குழு ஒன்றை அமைத்துள்ளது. மேலும், அதிகாரப்பூர்வமற்ற டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள் மீது ஒரு கண் வைத்திருக்குமாறு, மாநிலங்களை ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

கடன் செயலிகள் குறித்து ரிசர்வ் வங்கிக்கு மஹாராஷ்டிராவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து கர்நாடகா, புதுடெல்லி, ஹரியானா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் உள்ளன. தமிழகத்திலும் நிறைய புகார்கள் வருகின்றன.

அதிவிரைவாக கடன் தந்து, அதிக வட்டி கேட்டு டார்ச்சர் செய்யும் அந்த போலி செயலிகளை அறவே ஒழித்து பொதுமக்களை காப்பாற்ற வேண்டியது ரிசர்வ் வங்கியின் கடமையாக உள்ளது.

தயவுசெய்து யாரும் போலி கடன் செயலிகள் மூலம் கடன் பெறாதீர்கள். நொந்து நூலாகி விடுவீர்கள், ஜாக்கிரதை!

படிக்க வேண்டும்

spot_img