fbpx
Homeதலையங்கம்ஆன்லைன் சூதாட்டத்துக்கு முடிவு கட்டுவோம்!

ஆன்லைன் சூதாட்டத்துக்கு முடிவு கட்டுவோம்!

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் என்கிற கொடூர அரக்கன், தன் கொடுங்கரங்களால் மீண்டும் ஒரு தாக்குதலை நடத்தி இருக்கிறான். எப்போதுமே ஒவ்வொரு உயிராகப் பறிக்கும் அந்த அரக்கன், இம்முறை 4 உயிர்களை ஒரே நேரத்தில் காவு வாங்கி தன் பசியைத் தீர்த்துக் கொண்டிருக்கிறான்.

ஆம்; வங்கி அதிகாரி மணிகண்டன் ஆன்லைன் சூதாட்டத்தில் 1 கோடி ரூபாயை இழந்ததன் விளைவாக மனைவி, இரு மகன்களைக் கொன்றுவிட்டு, தன் உயிரையும் மாய்த்துக் கொண்டிருக்கிறார்.

ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகளோடு கொலைகளும் அரங்கேறி இருக்கிறது. கடந்த 4 மாதங்களில் 7 தற்கொலைகள் தமிழகத்தில் நடந்திருக்கின்றன. இந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

முந்தைய ஆட்சிக் காலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்து நிறைவேற்றப்பட்ட சட்டம் முழுமையாக இல்லை என்று கூறி அதனை கடந்த மாதம் 3ம் தேதி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதனைத் தொடர்ந்து தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற உத்தரவிட்டார்.

இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றத் தீர்ப்பை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கு இன்னும் விசாரணைக்கு வரவில்லை.

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்தே ஆக வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. உச்சநீதிமன்ற தீர்ப்பு வருவதற்குள் இன்னும் பல உயிர்கள் பறிபோய் விடும் அபாயமும் உள்ளது.

இதற்கு என்ன தான் தீர்வு? உயர்நீதிமன்றம் ஏற்கனவே அறிவுறுத்தியபடி, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் திருத்தச் சட்டத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றுவது தான் முழுமையான தீர்வுக்கு வழிவகுக்கும்.

இன்று தொடங்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே அவசர, அவசியத் தேவையாக உருவெடுத்து இருக்கிறது.

மாற்றுக் கருத்து இல்லா தமிழக அரசு அதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்; எடுக்கும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்துக்கு வைப்போம், முற்றுப்புள்ளி!

படிக்க வேண்டும்

spot_img