‘ஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கை அடிப்படையில் 2024ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்கும்.திமுக ஆட்சியும் மாறும்; காட்சியும் மாறும். தமிழக சட்டமன்றம் முடக்கப்படும்’ & இப்படி தமிழகத்தில் முதலில் குரல் கொடுத்தது யார் தெரியுமா?.
முன்னாள் முதல்வரும் இன்னாள் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தான். உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் தான் இந்த குரலை எழுப்பி உள்ளார். இதனை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் வழிமொழிந்திருக்கிறார்.
2018ம் ஆண்டு ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து சட்ட ஆணையம் டெல்லியில் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அதிமுக தனது எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்திருந்தது. 2022ல் திடீரென ஆதரிக்கிறது.
திமுக ஆட்சியை வீழ்த்த ஜனநாயக வழி எதுவும் தென்படாததால் குறுக்கு வழியை சிந்தித்த போது அதிமுகவுக்கு கிடைத்தது தான் இந்த கொள்கை முரண்பாடு. இதன் மூலம் எடப்பாடியின் பேராசை பட்டவர்த்தனமாக வெளிப்பட்டுள்ளது.
திமுக ஆட்சி கலைக்கப்பட வேண்டும், சட்டப்பேரவையை முடக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை எடப்பாடி வெளிப்படுத்தி இருக்கிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்து உள்ளார்.
மேலும் இப்படியொரு கருத்தை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழ்நாட்டு மக்கள் அளித்த தீர்ப்பை எடப்பாடி பழனிசாமி மதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரா அல்லது பாஜகவின் செய்தி தொடர்பாளரா? என்ற கேள்வியை முன்வைத்துள்ளார் திருமாவளவன்.
அதேநேரத்தில், இந்த சர்வாதிகாரத்தனமான கொள்கையை கையிலெடுத்த பாஜகவே, எடப்பாடியின் கூற்றை ஆமோதிக்கவில்லை. தமிழ்நாடு பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி என்ன சொல்கிறார் தெரியுமா?ஒரேநாடு, ஒரே தேர்தல் என்பது பாஜகவின் கொள்கை.
அதனடிப்படையில் எடப்பாடி பழனிசாமி அப்படி பேசியிருக்கலாம். ஆனால் 2024ம் ஆண்டுக்குள் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்குமா என்றால் நடக்காத விஷயம் தான்என்று எடப்பாடிக்கு பதிலையும் தந்திருக்கிறார், நாராயணன் திருப்பதி.
எடப்பாடியின் வீராவேசம் எல்லாம் தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காகத் தான். தன் கட்சியினரை உசுப்பி விடுவதற்கான பிரசாரமாகத் தான் இதனை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பார்த்து எதிர்வினையாற்றி வருகின்றன.
எடப்பாடிக்கு அமைச்சர் சேகர்பாபு,அத்தைக்கு மீசை முளைக்கட்டும்; பின் சித்தப்பா என பெயர் வைக்கலாம்` என பதிலைச் சொல்லி இருக்கிறார்.
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா…!



