fbpx
Homeதலையங்கம்அச்சிட்ட பேப்பரில் வைத்து வடை, பஜ்ஜி சாப்பிடாதீர்!

அச்சிட்ட பேப்பரில் வைத்து வடை, பஜ்ஜி சாப்பிடாதீர்!

தமிழகத்தில் பலகாரக் கடைகள், தேநீர் கடைகள், உணவகங்கள், பேக்கரிகள், இனிப்பகங்கள் உள்ளிட்ட கடைகளில் பஜ்ஜி, வடை, போண்டா, பப்ஸ், ஸ்வீட்ஸ் மற்றும் இதர பொருள்கள் பொதுமக்களுக்கு அச்சிடப்பட்ட நியூஸ் பேப்பர் மற்றும் காகிதங்களில் பரிமாறுவதும், பார்சல் கட்டுவதும், தொடர்ந்து நடந்து வருகிறது.
வணிகர்களின் இந்த மாதிரியான பாதுகாப்பற்ற பழக்கவழக்கங்களால் பொதுமக்களின் பொது சுகாதார நலன் பாதிக்கப்படும்.

அச்சிடப்பட்ட நியூஸ் பேப்பரில் விநியோகிக்கப்படும் உணவுப் பொருள்களைத் தொடர்ந்து உண்ணும் பொதுமக்களுக்கு அந்தப் பேப்பரின் அச்சு மையில் உள்ள காரீயத்தினால், வயிற்றுப்புண் ஏற்பட்டு பின்னாளில் அது கேன்சராக உருவெடுக்கும் வாய்ப்புகள் அதிகம்.

பஜ்ஜி, வடையில் அதிக எண்ணெய் இருந்தால் அதனை நியூஸ் பேப்பரில் வைத்து அமுக்குவதை பார்த்திருக்கிறோம். நாமும் கூட அதைச் செய்திருப்போம்.
அப்போது அச்சிட்ட பேப்பரில் உள்ள மை, பலகாரத்தில் படியாமல் இருக்குமா? அவற்றைச் சாப்பிடும் நமக்குப் பாதிப்பு ஏற்படத் தானே செய்யும்.

அதனால் தான் தூத்துக்குடி மாவட்டத்தில் வடை, பஜ்ஜி போன்ற இதர பொருள்கள் அச்சிடப்பட்ட நியூஸ் பேப்பர்களில் வழங்கத் தடை செய்யப்பட்டிருக்கிறது.
இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் சமூக அக்கறையுடன் பிறப்பித்துள்ளார்.

அதோடு நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அச்சிடப்பட்ட நியூஸ் பேப்பர் மற்றும் காகிதங்களில் உணவைப் பரிமாறுவதாலும், பார்சல் கட்டுவதாலும் ஏற்படும் அபாயங்கள் மற்றும் சமூக பொறுப்புகள் குறித்து , அருந்ததி அரசு என்பவர் இயக்கியுள்ள ‘கருப்பு மை’ என்ற விழிப்புணர்வு குறும்படத்தையும் அம்மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு அதனை அனைவரும் பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

உணவுப் பொருள்களை வாழை இலை மற்றும் மக்களின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காத இயற்கை முறையிலான பிளேட்டுகளில் வணிகர்கள் வழங்க வேண்டும். பொதுமக்களும் அச்சிட்ட பேப்பர்களில் வைத்து உண்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

பாதி பேருக்கு இது தெரிந்த விஷயம் தான். மீதி பாதி பேருக்கு தெரியாத விஷயமாகவே இருக்கிறது.

விழிப்புணர்வு ஏற்படுத்தி அதனைச் செயல்படுத்த முனைப்பு காட்டி உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுகள்.

மாநிலம் முழுவதும் இந்த நடைமுறையை கண்டிப்பாக அமல்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு அறிவுறுத்தலாம்!

படிக்க வேண்டும்

spot_img