நாமக்கல் – மோகனூர் சாலையில் உள்ள தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ச.உமா உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு ரதத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஒவ்வொரு ஆண்டும் குடும்ப நலத்துறை சார்பாக ஜூலை 11 ம் நாள் உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த வருடம் “ஒவ்வொரு தம்பதியரின் பெருமை நலம். அதுவே வளர்ந்த இந்தியாவின் புதிய அடையாளம்” என்ற கருப்பொருளை மையமாக வைத்து அனுசரிக்கப்படுகிறது. மேலும் மாவட்டம் மற்றும் வட்டார அளவில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு, மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகள், ஆணும் பெண்ணும் சமம், பெண் சிசுக் கொலையை தடுத்தல் மற்றும் பெண் கல்வியை ஊக்குவித்தல், இளவயது திருமணத்தை தடுத்தல், வளர் இளம் பெண்கள் ஆரோக்கியத்தில் அரசின் சிறப்பு திட்டங்கள் பற்றி காணொளி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
வருகிற ஜூலை 24 – ஆம் தேதி வரை அனைத்து அரசு மருத்துவ மனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தகுதியுள்ள தம்பதியர்களுக்கு நிரந்தர கருத்தடை முறைகளான ஆண் கருத்தடை சிகிச்சை, பெண்களுக்கு குடும்பநல கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தற்காலிக கருத்தடை முறைகளான கருத்தடை வளையம் பொருத்துதல், அந்தாரா கருத்தடை ஊசி போடுதல், சாயா மற்றும் கருத்தடை மாத்திரைகள் வழங்குதல் ஆகிய பணிகள் சிறப்பான முறையில் தமிழக அரசின் நெறிமுறைகளின் படி பாதுகாப்பாக செய்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இப்பேரணியானது நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி மோகனூர் சாலை வழியாக பேருந்து நிலையம், மணி கூண்டு வரை சென்று மீண்டும் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை வந்தடைந்தது. 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் செவிலியர்கள் உலக மக்கள் தொகை தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.
இப்பேரணியில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.சாந்தா அருள்மொழி, இணை இயக்குநர் மருத்துவ பணிகள் மரு.ராஜ்மோகன், துணை இயக்குநர்கள் மரு.ஜெயந்தினி (தொழு நோய்), மரு.வாசுதேவன் (காசநோய்), மாவட்ட விரிவாக்க கல்வியாளர் டி.சார்லஸ்ராஜன், பள்ளி மாணவ, மாணவியர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



