கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தில், மாவட்ட அளவில் பெண் குழந்தைகளுக்கான தடகளப் போட்டிகள் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சரயு போட்டிகளைத் துவக்கி வைத்து பேசினார். அவர் பேசுகையில், பெண் குழந்தைகளிடம் தன்னம்பிக்கை மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும், கல்வியுடன் விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண்கள் பங்கெடுப்பதை ஊக்குவிக்கும் நோக்கிலும், மாவட்ட சமூகநல அலுவலகத்தின் மூலம் விளையாட்டுப் போட்டிகள் நடந்தப்படுகிறது என்றார்.
விளையாட்டுப் போட்டியில், மாவட்டத்தில் உள்ள 40 பள்ளிகளில் இருந்து 600 மாணவிகள் பங்கேற்றனர். இவர்களுக்கு, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு, மெடல் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக பங்கேற்ற முதல் மூன்று பள்ளிகளுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் சக்தி சுபாசினி, உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, மாவட்ட மகளிர் அதிகார மையம் ஒருங்கிணைப்பாளர் ராகவி, மாவட்ட திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜகோபால், உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டுப் பயிற்றுனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.