fbpx
Homeதலையங்கம்41 தொழிலாளர்கள் மீட்பில் தமிழ்நாட்டின் முக்கிய பங்கு!

41 தொழிலாளர்கள் மீட்பில் தமிழ்நாட்டின் முக்கிய பங்கு!

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் இறுதியாக 27 எலி-வளை சுரங்க நிபுணர்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 17 நாட்களுக்கு பிறகு அதாவது 410 மணிநேர போராட்டத்துக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், வெளிநாட்டு நிபுணர்கள், தீயணைப்பு வீரர்கள், ராணுவத்தினர், ரிக் நிறுவன நிபுணர்கள் இணைந்து இந்த மீட்பு பணியை மேற்கொண்டனர். நேற்று இரவு 8.40 மணியளவில் 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதன்மூலம் கடந்த 17 நாட்களாக, தொடர்ந்து 410 மணிநேரம் நடந்து வந்த மீட்பு பணி என்பது வெற்றி பெற்றுள்ளது. தொழிலாளர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து அங்கு கூடியிருந்த குடும்பத்தினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மீட்கப்பட்ட தொழிலாளர்களை உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் கார்கே, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மகிழ்ச்சியும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர். 41 தொழிலாளிகளுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி உற்சாகப்படுத்தி உள்ளார்.

சுரங்கத்தினுள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் தொடக்கத்தில் இருந்தே அதிகளவிலான தமிழர்கள் ஈடுபட்டு வந்தனர். அவர்களில் முதல் தொழிலாளர் மீட்கப்பட்டார் என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை மீட்பு குழுவில் இருந்த பொறியாளர் சந்திரன் என்ற தமிழர் முதலாவதாக உலகிற்கு அறிவித்தார். அவரது பேட்டி உலககெங்கும் டிவிக்களில் ஒளிபரப்பானது.

சுரங்கத் தொழிலாளர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் திருச்செங்கோட்டை சேர்ந்த தரணி ஜியோ டெக் நிறுவனத்தின் நிபுணத்துவம் பெற்ற வல்லுனர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் மூலம் தான் தொழிலாளர்கள் பத்திரமாக இருப்பது எண்டாஸ்கோபி கேமரா மூலம் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்கள் முயற்சி தான் தொழிலாளர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கி இத்தனை நாள் உயிரோடு இருக்க உதவியது. இது தவிர மீட்பு பணியில் 40க்கும் மேற்பட்ட தமிழர்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் சண்முகம் என்பவர் ஆகர் இயந்திரத்தை இயக்கும் பிரிவின் தலைமை பொறுப்பை வகித்திருந்தார்.

தொழிலாளர்கள் சுரங்கப்பாதையில் இருந்து பத்திரமாக வெளியே கொண்டு வரப்பட்டது அனைவருக்கும் மிகுந்த ஆறுதலையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. 140 கோடி இந்தியர்களின் பிரார்த்தனையால்… மீட்புக் குழுவினரின் அயராத பணியால் இறுதியில் வெற்றி கிடைத்துள்ளது.

உலக அரங்கில் இந்தியாவின் திறனை நிலைநாட்டிய மீட்புக்குழுவினர் அனைவரையும் நாடே நன்றியுடன் போற்றிப் பாராட்டுகிறது.
வாழ்த்துகள்!

படிக்க வேண்டும்

spot_img