fbpx
Homeதலையங்கம்‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ - அசத்தும் சி.எம்!

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ – அசத்தும் சி.எம்!

‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அரசினால் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் மக்களைச் சரியாகச் சென்று அடைகின்றனவா? பல்வேறு துறைகளால் வழங்கப்படுகின்ற சேவைகள் மக்களுக்கு முறையாகக் கிடைக்கின்றனவா? என்பதை முதல்வரே களத்திற்கு நேரடியாகச் சென்று, ஆய்வில் ஈடுபட்டு, அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டு, கள அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தை நடத்தி உரிய அறிவுரைகளை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டது தான் இந்த திட்டம்.

“மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள், அவர்களை நேசி, அவர்களுக்குச் சேவை செய்” என்று சொன்ன பேரறிஞர் அண்ணாவின் கனவை நனவாக்கும் திட்டம் இது.

‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்வர்.

உங்களை நாடி, உங்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் வருகிறது. நானும் அரசு இயந்திரமும் களத்திற்கு வருகிறோம். கவனமுடன் உங்கள் குறை கேட்போம்; களத்திலேயே தீர்வு காண்போம்; மக்களின் கவலையைப் போக்குவோம்; மகத்தான தமிழ்நாட்டை உருவாக்குவோம் என தெரி வித்து இப்புதிய திட்டத்தை முனைப்புடன் முன்னெடுத்துள்ளார், முதல்வர் மு.க.ஸ்டாலின்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். பேருந்துகளில் மகளிருக்கு
இலவச பயணம், காலை உணவுத்திட்டம்… என எந்த மாநில முதலமைச்சர்களும் சிந்திக்காக பல திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறார், முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இப்போது ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தை அறிவித்து அசத்தி இருக்கிறார். சோதனைகள் எத்தனை வந்தாலும் தடைகள் பல குறுக்கிட்டாலும் எல்லாவற்றையும் உடைத்தெறிந்து தமிழ்நாட்டின் வளர்ச்சி ஒன்றையே மனதில் வைத்து உழைத்துக் கொண்டிருக்கிறார், முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சாதனைகள் தொடர, பாராட்டி வாழ்த்துவோம்!

படிக்க வேண்டும்

spot_img