22 வயதான திருநங்கை ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வேறு நகரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பாலினத்தை மாற்றுவதற்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக பெருங்குடலின் கடைசிப் பகுதிக்கும், செயற்கையாக உருவாக்கப்பட்ட பெண்ணுறுப்புக்கும் நடுவே உள்ள பாதையில் துவாரம் ஏற்பட்டது. இந்த பாதிப்பால் அவருக்கு ஆசனவாய் வழியாக வெளியேற வேண்டிய இயற்கை கழிவுகள், பிறப்புறுப்பிலிருந்து கசிந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.
இந்த பிரச்னையுடன் எஸ்.ஆர்.எம். பிரைம் மருத்துவமனைக்கு அவர் வந்தார். அவருக்கு இரைப்பை குடலியல் மற்றும் கல்லீரல் துறையின் தலைவரும், முதுநிலை மருத்துவருமான டாக்டர் எஸ். அருள்பிரகாஷ் மற்றும் முதுநிலை மருத்துவ ஆலோசகர் டாக்டர் தருண் ஜே.ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் சிகிச்சை மேற்கொண்டனர்.
அதன்படி மாடுகளின் இதயத் தசை பகுதியிலிருந்து தயாரிக்கப்படும் Bovine Pericardial Patch என்ற உயிரித் திசு மற்றும் க்ளிப் உபகரணம் ஆகியவற்றைக் கொண்டு புதியதொரு எண்டோஸ்கோபி முறையில் துவாரம் அடைக்கப்பட்டது. அதுவும், ஒரே நாளில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டதுதான் கூடுதல் சிறப்பு.
இதுதொடர்பாக டாக்டர் அருள்பிரகாஷ் கூறியதாவது:
எஸ்.ஆர்.எம். பிரைம் மருத்துவமனையில் அந்த திருநங்கைக்கு சிகிச்சையளிக்கும்போது ஒரே நேரத்தில் இரண்டு எண்டோஸ்கோபி மருத்துவ நிபுணர்கள் நுட்பமாக செயல்பட்டனர். அதாவது துவாரத்தின் இரு பகுதிகளையும் கவனமாக ஒருவர் கண்காணித்தார். மற்றொருவர் உயிரித் திசுவையும், க்ளிப்பையும் துல்லியமாக பொருத்தினார். இத்தகைய மேம்பட்ட எண்டோஸ்கோபி நுட்பம் வெகு சில இடங்களில் மட்டுமே உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
சிகிச்சை குறித்து டாக்டர் தருண் ஜே. ஜார்ஜ் கூறியதாவது:
திருநங்கைக்கு செயற்கை வாயு முறையில் துவாரத்தை சுற்றியிருந்த பகுதியில் மென்மையான வெப்பம் ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் அப்பகுதி சற்று கடினமாக்கப்பட்டு, அதன் பின்னர் மாட்டின் பெரிகார்டியல் திசுவானது அங்கு வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 14 மி.மீ. அளவு கொண்ட ஓவர்-தி-ஸ்கோப் கிளிப்பை பயன்படுத்தி திசுவானது பொருத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.



